தொடர்ந்து 6 டெஸ்ட் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன முகமது ஷமி

Mohammed shami
Mohammed shami

கிரிக்கெட் விளையாட்டில் ஒருகாலத்தில் பௌலர்கள் அவ்வளவாக ரன் குவிக்க தடுமாறுவார்கள். ஆனால் தற்கால கிரிக்கெட்டில் கடைநிலை வீரர்களும் பேட்டிங்கில் பங்களிப்பை அளித்து வருகின்றனர். 2018ல் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தொடரை கைப்பற்ற அந்த அணியின் கடைநிலை பேட்ஸ்மேன்கள் தான் முழு முதல் காரணமாக இருந்தனர். இந்திய அணியில் கடைநிலை பேட்டிங் தற்போது வரை மிக மோசமாகவே உள்ளது. குறிப்பாக சமீப காலமாக முகமது ஷமி-யின் ஆட்டத்திறன் அந்த நம்பிக்கையை பாழ் படுத்துகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இவரிடமிருந்து அணி நிர்வாகம் அதிகப்படியான ரன்கள் எதிர்பார்க்கவில்லை. இரண்டு இலக்க ரன்களிலாவது ரன்கள் எடுத்தால் அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுக்கும். எனவே அணி நிர்வாகம் முகமது ஷமி-யை சற்று பேட்டிங் பயிற்சி எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இவரது சக வீரர்கள் சிறப்பான ரன் குவிப்பில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாளில் ஈடுபட்டனர். ஷமி மட்டும் சுழியத்துடன் வெளியேறினார். அறிமுக மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-ரவுண்டர் ரன்கீம் காரன்வால் முகமது ஷமியை டக் அவுட் ஆக்கினார். தொடர்ந்து 6வது முறையாக சுழியத்தில் முகமது ஷமி ஆட்டமிழந்துள்ளார். முகமது ஷமி-யின் கடைசி 6 இன்னிங்ஸில் 3 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது ஷமியின் கடைசி 6 டெஸ்ட் இன்னிங்ஸ் பேட்டிங்

• 0(2) vs மேற்கிந்தியத் தீவுகள் (கிங்ஸ்டன்)
• 0(1) vs மேற்கிந்தியத் தீவுகள் (நார்த் சவுண்ட்)
• 0*(3) vs ஆஸ்திரேலியா (மெல்போர்ன்)
• 0*(0) vs ஆஸ்திரேலியா (பெர்த்)
• 0(1) vs ஆஸ்திரேலியா (பெர்த்)
• 0(1) vs ஆஸ்திரேலியா (அடிலெய்டு)

எதிர்பாராத விதமாக பேட்டிங்கில் முகமது ஷமியின் சொதப்பல்கள் இந்திய அணியை பாதிக்கவில்லை. ஹனுமா விகாரியின் முதல் டெஸ்ட் சதம், இஷாந்த் சர்மாவின் முதல் டெஸ்ட் அரைசதம் மற்றும் மயான்க் அகர்வால், விராட் கோலியின் அரைசத பங்களிப்பால் இந்தியா 416 என்ற சிறப்பான டெஸ்ட் ரன்களை அடைய முடிந்தது.

இந்திய அணியில் கடைசியாக விக்கெட் வீழ்த்தப்பட்டவர் ஹனுமா விகாரி. இவர் 111 ரன்கள் எடுத்திருந்த போது மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டரால் வீழ்த்தப்பட்டார். ஹனுமா விகாரி மொத்தமாக 225 பத்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டரிகளை விளாசி, 8வது விக்கெட்டில் களமிறங்கிய இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து 112 ரன்களை குவித்தார். இஷாந்த் சர்மா 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இந்திய பிரிமியர் வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ்பிரிட் பூம்ரா தனது அதிரடி பௌலிங்கில் கரீபியன் பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்களை களத்தில் அதிக நேரம் தங்க விடாமல் மீண்டுமொரு தோல்விக்கு கரீபியன் அணியை தயார் செய்தார் பூம்ரா. இப்போட்டியில் பூம்ரா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக இரண்டாம் நாள் ஆட்டத்தில் 16 ரன்களை மட்டுமே அளித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக மேற்கிந்தியத் தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

Quick Links

Edited by Fambeat Tamil