அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். ஐபிஎல் கோப்பையை அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் வென்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பல வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆனால் ஐபிஎல் விதிமுறைப்படி, போட்டியின் போது அணியில் 7 இந்திய வீரர்கள், கண்டிப்பாக விளையாட வேண்டும். எனவே 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஒவ்வொரு அணியிலும் விளையாடுவார்கள். இது போன்று ஐபிஎல் தொடரில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) சுரேஷ் ரெய்னா ( 193 போட்டிகள் )
ஐபிஎல் தொடரில் தலைசிறந்த அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. இவ்வாறு சென்னை அணி தலை சிறந்த அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம், சென்னை அணியில் விளையாடும் வீரர்கள் தான். சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாடி வருகிறார். தனது சிறப்பான விளையாட்டின் மூலம், பல போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.
இவர் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். எனவேதான் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை “மிஸ்டர் ஐபிஎல்” என்று அழைத்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா இதுவரை மொத்தம் 193 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) மகேந்திர சிங் தோனி ( 190 போட்டிகள் )
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன், மகேந்திர சிங் தோனி. இவரும் தனி ஒருவராக போராடி பல போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யக்கூடியதில் வல்லவர். இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இதுவரை மொத்தம் 190 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) ரோகித் சர்மா ( 188 போட்டிகள் )
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் நமது இந்திய அணியின் துணை கேப்டன், ரோகித் சர்மா. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா பல சாதனைகளைப் படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் விளாசியுள்ள ரோகித் சர்மாவின் சாதனை, இன்று வரை நம்மால் மறக்க முடியாத சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது.
அது மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் 4 முறை சதம் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். இதுவரை மொத்தம் 188 ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.