அதிரடி என்றாலே முதலில் நமக்கு ஞாபகத்தில் வருவது ஐபிஎல் தொடர் தான். தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால், ஒவ்வொரு போட்டியிலும் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. எனவேதான் இந்த ஐபிஎல் தொடரானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கண்ட ஒரே அணி, மும்பை இந்தியன்ஸ் அணி தான். இதுவரை மொத்தம் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) சனத் ஜெயசூர்யா ( 11 சிக்சர்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இலங்கை அணியின் ஜாம்பவனான சனத் ஜெயசூர்யா. இவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள், இலக்காக வைத்தது சென்னை அணி. இந்த இலக்கை சேஸ் செய்யும்பொழுது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய சனத் ஜெயசூர்யா, 48 பந்துகளில் 114 ரன்கள் விளாசினார். அதில் 11 சிக்சர்களும் அடங்கும். அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 14 ஓவர்களில் எளிதாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
#2) கீரன் பொல்லார்டு ( 10 சிக்சர்கள் )
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி வீரரான கீரன் பொல்லார்டு. இவர் பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர அதிரடி வீரராக திகழ்ந்து வருகிறார். தனி ஒருவராக போராடி பல போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது.
இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி சேஸ் செய்யும்பொழுது முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்களது விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் பொல்லார்டு தனி ஒருவராக போராடி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அவர் 31 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். அதில் 10 சிக்சர்களும் அடங்கும்.
#3) ஹர்திக் பாண்டியா ( 9 சிக்சர்கள் )
தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர், நமது இந்திய அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இவருக்கு மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. அனைத்து போட்டிகளிலுமே தனது அதிரடியை காட்டி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கொல்கத்தா அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 233 ரன்களை இலக்காக வைத்தது கொல்கத்தா அணி. இந்த கடினமான இலக்கை செஸ் செய்யும் பொழுது, தனி ஒருவராக போராடிய ஹர்திக் பாண்டியா, 34 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். அதில் 9 சிக்சர்களும் அடங்கும். ஆனால் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.