12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. சென்னை அணியில் இரண்டு மாற்றங்களாக ஸ்காட் ககலைன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு மிச்செல் சான்ட்னர் மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப் பட்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டூவர்ட் பின்னி கிருஷணப்பா கௌதம் ஆகியோர் நீக்கப்பட்டு ஜெயதேவ் உனத்கட் மற்றும் அறிமுக வீரர் ரியான் பராக் ஆகியோர் சேர்க்கப் பட்டனர்.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களும் ஜோஸ் பட்லர் 23 ரன்களும் ஸ்ரேயாஸ் கோபால் 19 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி சார்பில் ஷார்துல் தாகூர், தீபக் சாஹார் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் மிச்செல் சான்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனியும் அம்பத்தி ராயுடுவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர் . கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை ஜடேஜா சிக்சருக்கு தூக்கினார். மூன்றாவது பந்தில் டோனி அவுட்டானார். நான்காவது பந்தை ஸ்டோக்ஸ் வீசினார். அந்த பந்து மிச்செல் சான்ட்னரின் இடுப்புக்கு மேல் சென்றது. அதனால் அந்த பந்தை நோ பால் என்று கள நடுவர் அறிவித்தார். அது சரியான பந்தே என்று லெக் அம்பயர் நோ பால் முடிவை மாற்றி கூறினார்.
இதனால் தன் பொறுமையை இழந்த சென்னை அணி கேப்டன் தோனி தன் முகாமிலிருந்து மைதானத்திற்குள் வந்து நடுவர்களிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இருந்த போதிலும் நடுவர்கள் தங்கள் முடிவை மாற்றவில்லை. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை சிக்சருக்கு அடித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் மிச்செல் சான்ட்னர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும் ஜெயதேவ் உனத்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், தவால் குல்கர்னி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மைதானத்திற்குள் நுழைந்த தோனியின் இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செயலை நடுவர்கள் ஐபில் கமிட்டியிடம் கொண்டு சென்றனர். ஐபிஎல் போட்டி விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தை சென்னை அணி கேப்டன் தோனிக்கு அபராதமாக விதித்துள்ளது. சென்னை அணி தன்னுடைய அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியை ஞாயிறு அன்று எதிர்கொள்கிறது.