நடந்தது என்ன?
காயம் காரணமாக 2019 ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் விலகிய அல்ஜாரி ஜோசப்பிற்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பியூரான் ஹென்றிக்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (ஏப்ரல் 23) அறிவித்துள்ளது.
அல்ஜாரி ஜோசப் தான் விளையாடிய 3வது ஐபிஎல் போட்டியிலேயே காயமடைந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளருக்கான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை நிரப்ப இடது கை வேகப்பந்து வீச்சாளரை மும்பை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
உங்களுக்கு தெரியுமா?
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மந்தமாக ஆரமித்து தற்போது புள்ளி அட்டவனையில் 3வது இடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சில போட்டிகளில் திரில்லிங்காக வெற்றி பெற்றதன் காரணமாகவே புள்ளி அட்டவனையில் டாப் 4 இடங்களில் இருக்க முடிந்தது.
ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட், ஜாஸ்பிரிட் பூம்ரா, குவின்டன் டிகாக் ஆகியோர் இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர். ஹர்திக் பாண்டியா தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அனைத்து போட்டிகளிலும் மும்பை அணியின் ஃபினிஷராக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். அத்துடன் அனுபவ வீரர் கீரன் பொல்லார்டும் சில போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பௌலிங்கில் ஜாஸ்பிரிட் பூம்ரா அசத்தி வருகிறார்.
கதைக்கரு...
அல்ஜாரி ஜோசப் மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் காயம் காரணமாக 3 போட்டிகளுடன் அவர் தம் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே சிறப்பான வேகத்தை வெளிபடுத்தினார். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பௌலிங்கை தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே வெளிப்படுத்தி அசத்தினார். 4 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சொஹைல் தன்விர்-ரின் ஐபிஎல் சாதனையை முறியடித்தார்.
இதற்கிடையில் இனிவரும் போட்டிகளில் அல்ஜாரி ஜோசப்-பிற்கு மாற்று வீரராக பியூரான் ஹென்றிக்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டின் கேப் டவுன் நகரைச் சேர்ந்த இவர் சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்தார். தனது இடது கை வேகப்பந்து வீச்சின் மூலம் சிறப்பான ஆட்டத்தை சர்வதேச போட்டிகளில் மேற்கொண்டுள்ளார்.
10 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 8.87 எகானமி ரேட்-டுடன் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் பங்கேற்று 9.4 எகானமி ரேட்-டுடன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே சிறப்பான ஆட்டத்திறனை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது.
அடுத்தது என்ன?
பியூரான் ஹென்றிக்ஸ் ஐபிஎல் தொடரில் கடைசியாக கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக பங்கேற்றார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகப்படியான வாய்ப்புகள் இவருக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.