ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நமது இந்தியாவில் தொடர்ந்து 11 வருடமாக மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விறுவிறுப்புக்கும், அதிரடிக்கும் பஞ்சமிருக்காது. அதனால்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் தொடரானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள ஒரே அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். இதுவரை மொத்தம் 3 முறை, மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய வெற்றி எது என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் 45 ஆவது போட்டியில் டெல்லி டெர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதினர். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்திவ் பட்டேல் மற்றும் சிம்மன்ஸ் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பார்த்திவ் படேல் 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு சிம்மன்ஸ் மற்றும் பொல்லார்ட் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் அதிரடியாக விளையாடி சிக்சர்களை பறக்கவிட்டனர். அதிரடியாக 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை விளாசிய சிம்மன்ஸ், 43 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். பொல்லார்ட் 35 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் வந்து அதிரடியாக 3 சிக்சர்கள் விளாசிய ஹர்திக் பாண்டியா, 14 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கருண் நாயர் மற்றும் சாம்சன் களமிறங்கினர். டெல்லி அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சாம்சன் முதல் ஓவரின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டெல்லி அணியின் அதிரடி வீரரான ரிஷப் பண்ட், பும்ரா ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். வெறும் 10 ரன்களுக்குள் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய கருண் நாயரும் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் டெல்லி அணி 14 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 66 ரன்கள் மட்டுமே அடித்தது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் சிங், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது நேற்றே தொடங்கிவிட்டது. இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.