ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று நடக்க உள்ள லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த மோதல் இன்று நடக்கிறது. மூன்று முறை சாம்பியன்களான மும்பை அணி சென்னை சூப்பர் கிங்ஸை வரலாற்று சிறப்புமிக்க வான்கடே மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறது.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா இந்த மோதலை ஐபிஎல்லின் El - Classico என வர்ணித்துள்ளார் . ரோகித் சர்மாவே இப்படி கூறியுள்ளதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் மேலும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமைக்குரியது மும்பை இந்தியன்ஸ் அணி. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 13 முறை மும்பை அணியும் 11 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை அணி சென்னை அணியை இரண்டு முறை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை அணி ஒரு முறை இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது .
ரோகித் சர்மாவின் பேட்டியில், "சென்னை அணிதான் மும்பை அணியின் பிரதான போட்டியாளரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் அப்படி கூட வைத்துக்கொள்ளலாம். சென்னை அணி ஐபிஎல் வெற்றிகரமான அணிகளுள் ஒன்று ஆகும், அவர்கள் பங்கேற்ற 9 சீசனிலும் பிளே ஆப் சுற்றை எட்டியுள்ளதே அதற்கு அத்தாட்சியாகும். அவர்களும் மூன்று முறை கோப்பையை வென்றனர் நாங்களும் கோப்பையை மூன்று முறை வென்றுள்ளோம். மக்கள் இந்த மோதலை விரும்புவதால் நான் இந்த போட்டியை பெரிய மோதலாக கூறவில்லை, ஆனால் களத்தில் போட்டியின்போது இந்த இரு அணி வீரர்களும் தங்கள் அணியின் வெற்றிக்காக தங்கள் முழுத் திறமையையும் பயன்படுத்துவர் அதனால்தான் இந்தப் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது". அதனால்தான் இந்த போட்டி அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா சொன்னபடியே இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் சமீபகாலமாக இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இது மும்பைக்கு சற்று கவலையளிக்கக் கூடியதாக உள்ளது மேலும் இந்தத் தொடரில் மும்பை அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது மறுபக்கம் சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே ரசிகர்களுக்கு இந்த போட்டி மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார் .சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக மிச்செல் சான்ட்னர் நீக்கப்பட்டு மோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் இரண்டு மாதங்களாக மயங்க மார்க்கண்டேவுக்கு பதிலாக ராகுல் சாஹரும் மிச்செல் மெக்லஹானுக்கு பதிலாக ஜேசன் பெஹ்ரன்டர்பும் சேர்க்கப்பட்டுள்ளனர்.