சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கம் போல் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 10 ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 8 தொடர்களின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இடம்பெறும் வழக்கமான அணியாக உள்ளது. இது மற்ற 7 அணிகளுக்கு தான் கடும் போட்டியாக அமைந்து வரும்.
இவ்வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்ற அணிகளுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 3 முறை மும்பை மற்றும் சென்னை அணிகள் இறுதிப் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 2 முறை வெற்றி பெற்று சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இரு அணிகளும் தலா 3 முறை ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியுள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் இரு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும், அவர்கள் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை கைப்பற்றிய சிறந்த அணி என்ற பெருமையைப் பெறும். வரும் ஞாயிறன்று நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் ரசிகர்களின் ஆவலிற்கு சிறிதும் பஞ்சமிருக்காது.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் XI-ல் ஒரு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவாலிஃபையர் 2ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஷர்துல் தாகூர் முரளி விஜய்-க்கு பதிலாக ஆடும் XI-ல் சேர்க்கப்பட்டார். இந்த ஆட்டத்தில் 1 ஓவரை மட்டும் வீசி 13 ரன்களை தனது பௌலிங்கில் வாரி வழங்கினார்.
ஷர்துல் தாகூர் டெல்லி மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த இரு போட்டிகளிலும் விக்கெட்டுகள் ஏதும் வீழ்த்தவில்லை. இவ்வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங்கில் அதிக ரன்களை எதிரணிக்கு வழங்கியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2019 ஐபிஎல் சீசனில் இவரது எகானமி ரேட் 9.38 ஆகும். ஷர்துல் தாகூருக்கு பதிலாக முரளி விஜயை ஆடும் XI-ல் சேர்த்தால் சென்னை அணியின் பேட்டிங் வலிமை கூடும்.
இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்றால் பௌலிங்கும், மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்றால் பேட்டிங்கும் தேர்வும் செய்யும் என தெரிகிறது. மேற்கண்டவாறு நடக்குமெனின் சென்னை சேஸிங் செய்யும் போது முரளி விஜய்-யின் பேட்டிங் கண்டிப்பாக தேவைப்படும்.
ஆனால் தற்போது சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுயுபிளஸ்ஸி மற்றும் ஷேன் வாட்சன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அதிரடி தொடக்கத்தை வெளிபடுத்தினார்கள். இதனால் முரளி விஜயை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே அணியில் களமிறக்க முடியும். ஆனால் இது அவரது பேட்டிங் வரிசை அல்ல. இந்த தேர்வு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கவும் வாய்ப்புள்ளது.
ஷர்துல் தாகூருக்கு பதிலாக கரன் சர்மா
ராஜீவ்காந்தி மைதானம் ஒரு ஸ்லோ பிட்ச் ஆடுகளமாகும். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தை அளிக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் கரன் சர்மா சென்னை அணிக்கு சரியான வீரராக இருப்பார். இறுதிப் போட்டியில் ஆடும் XI-ல் சேர்க்கப்பட்டால் சென்னை அணியின் 6வது பௌலராக கரன் சர்மா இருப்பார்.
கரன் சர்மா பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதால் இடது கை சுழற்பந்து வீச்சாளர் க்ருநால் பாண்டியா மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சகார் ஆகியோரது பௌலிங்கை சமாளிக்க இவரது பேட்டிங்கை சென்னை அணி பயன்படுத்தலாம். அனைத்தையும் விட கரன் சர்மா ஐபிஎல் தொடரின் அதிர்ஷ்ட வீரராக பார்க்கப்படுகிறார். கடைசி 3 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணிகளில் கரன் சர்மா இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக மகேந்திர சிங் தோனி வெற்றி பெற்ற அணியில் எவ்வித மாற்றமும் செய்ய மாட்டார். ஆனால் ஆடுகள தன்மை மாறுபடுவதால் தோனி இந்த மாற்றத்தை செய்து ஆகவேண்டும்.
தற்போதைய ஆட்டத்திறன் மற்றும் கடந்த கால நேருக்கு நேர் போட்டிகளை வைத்து பார்க்கும் போது மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணியாக உள்ளது. இருப்பினும் எம்.எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் அதிக ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிகளில் பங்கேற்றுள்ளது அந்த அணியின் பக்கபலமாகும்.