2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இருந்தே அதிக ரன்களைக் குவிப்பதில் ஓபனிங் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தொடர்ந்து மேலோங்கி இருக்கிறது. உதாரணமாக, 2008 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கிய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கலம் 73 பந்துகளில் 158 ரன்களை குவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மற்றுமொரு சான்றாக, கடந்தாண்டு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன் 117 ரன்களை குவித்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வெல்ல உதவினார். எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல், இந்த ஐபிஎல் தொடரிலும் தொடக்க பேட்ஸ்மேன்களை தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 611 ரன்களையும் ஜானி பேர்ஸ்டோ 445 ரன்களையும் குவித்துள்ளனர். மேலும், இவர்களே தொடரின் அதிக ரன்களைக் குவித்த பட்டியலில் முதல் இரு இடங்களை வகிக்கின்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 444 ரன்களையும் ராகுல் 441 ரன்களையும் குவித்து தங்களது அணியின் வெற்றிக்கு பங்காற்றி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பிளே ஆஃப் வாய்ப்பில் நீடித்துக் கொண்டிருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விராட் கோலியின் மற்றும் பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் முறையே 400 மற்றும் 326 ரன்களை குவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் தொடரின் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் 311 ரன்களையும் மற்றொரு பேட்ஸ்மேனான அஜிங்கியா ரஹானே 391 ரன்கள் குவித்து அணிக்கு மிகச்சிறந்த அடித்தளத்தை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கிடைத்திருக்கும் இரு தொடக்க பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோர் முறையே 401 மற்றும் 262 ரன்களைக் குவித்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பணிச்சுமையை குறைத்துள்ளனர். மேலும், பெரிய ஸ்கோரை சேஸ் செய்து பல வெற்றிகளை குவித்து புள்ளிப் பட்டியலில் மூன்றாமிடம் வகிக்க காரணமாய் உள்ளனர்.
இதேபோல், மற்ற அணிகளை சேர்ந்த ஓபனிங் பேட்ஸ்மேன்களான குயின்டன் டி காக் (393), ரோகித் சர்மா (295), டுபிளிசிஸ் (179), ஷேன் வாட்சன் (251), கிறிஸ் லின் (264), சுனில் நரின் (143) ஆகியோர் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இவர்களை தவிர்த்து அணியில் உள்ளவர்களான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாறி வருகிறார்கள் என்பதே நிதர்சன உண்மையாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் ஆந்திரே ரசல் (406) மற்றும் தோனி (314) ஆகியோரைத் தவிர்த்து அணியின் உள்ள மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சோபிக்க தவறி வருகின்றனர்.
இதுபோன்ற, சூழ்நிலைகளால் அணியில் உள்ள ஓபனிங் பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே ஆட்டத்தை இழக்கும் பட்சத்தில், பின்னர் களமிறங்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்க தடுமாறுகின்றனர். இனி வரும் ஆட்டங்களில் தொடர்ந்து முன்னணி பேட்ஸ்மேன்களோடு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று ரன்களைக் குவித்தால் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.