இந்தியன் பிரீமியர் லீக் என்னும் உலகின் மிகப்பெரிய டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெறாமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏனெனில், உலகின் மிகச்சிறந்த கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த அணியை வழி நடத்தி வருகிறார். உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை பங்கேற்றுள்ள அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற்றுள்ளது. வேறு எந்த அணியினருக்கும் இத்தகைய பெருமை அமைந்திடவில்லை. இருப்பினும், இந்த அணியில் இடம்பெற்ற சில வீரர்கள் போதிய வாய்ப்புகள் வழங்கப்படாததால் பிற ஐபிஎல் அணிகளுக்காக விளையாடிள்ளனர். அத்தகைய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஜார்ஜ் பெய்லி:
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஜார்ஜ் பெய்லி. அந்த தொடரில் சென்னை அணிக்கு மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களும் அற்புதமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இருந்தனர். இதன் காரணமாக, பெரும்பாலான போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து வந்த ஐபிஎல் தொடரில் இவருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதுவரை சென்னை அணிக்காக விளையாடிய மூன்று போட்டிகளில் 63 ரன்கள் குவித்துள்ளார். பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். மேலும், அந்தத் தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்றார், ஜார்ஜ் பெய்லி. தொடர்ந்து இரு சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர், 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
ஒவ்வொரு அணியிலும் இவர் குவித்த ரன்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் - 63 ரன்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 516 ரன்கள்
#2.விஜய் சங்கர்:
தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் ஒரு வளர்ந்து வரும் வீரராக இருந்து வருகிறார். மேலும், இவர் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாட இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதுவும், பேட்டிங்கில் களமிறங்காமல் பந்துவீச மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இவர் வீசிய ஒரு ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்திருந்தார். பின்னர், அடுத்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவரை விடுவித்திருந்தது, சென்னை அணி. 2016-இல் சன்ரைசர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் களமிறக்கப்பட்டார். அடுத்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, போதுமான போட்டிகளில் விளையாடினார். பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட இவர் 212 ரன்கள் 53 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். தற்போது ஹைதராபாத் அணியில் இடம் பெற்று தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், விஜய் சங்கர்.
ஒவ்வொரு அணியிலும் இவர் குவித்துள்ள ரன்கள்;
சென்னை சூப்பர் கிங்ஸ் - 0 ரன்கள்
டெல்லி டேர்டெவில்ஸ் - 212 ரன்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 240 ரன்கள்
#3.கிறிஸ் மோரிஸ்:
தென்ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ், தனது ஐபிஎல் வாழ்க்கைப் பயணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தொடங்கினார். 2013ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தமாகி தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அந்தத் தொடரின் நடைபெற்ற போட்டிகளில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட இவர், விளையாடிய 16 போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தினார். ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, பிராவோ போன்ற ஆல்ரவுண்டர்கள் இடம் பெற்றிருந்ததால் 2014ஆம் ஆண்டில் இவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பின்னர், டெல்லி அணியில் இடம் பெற்று தற்போது வரை 32 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 400க்கும் மேற்பட்ட ரன்களையும் 39 விக்கெட்களையும் டெல்லி அணிக்காக கைப்பற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தபோதிலும், எதிர்பார்த்த வகையில் இவர் ஜொலிக்கவில்லை.
ஒவ்வொரு அணியிலும் இவர் குவித்த ரன்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் - 7 ரன்கள் (14 விக்கெட்கள்)
டெல்லி டேர்டெவில்ஸ் - 427 ரன்கள் (40 விக்கெட்கள்)