3வது வார ஐபிஎல் போட்டிகள் ஒரு பார்வை :

CSK vs KKR - Source: BCCI/IPLT20.com
CSK vs KKR - Source: BCCI/IPLT20.com

12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைக்கின்றன . இந்தத் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் புள்ளிகள் பட்டியல் இறுதி வடிவம் பெறத் துவங்கியுள்ளன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் ,சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முதல் இரண்டு வாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர், அவர்கள் மேலும் இதே போல் இனி வரும் வாரங்களிலும் தொடர முயற்சிப்பர் என்று தெரிகிறது. மறுபுறம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் அடுத்த வாரம் தங்கள் தங்களின் அதிர்ஷ்டம் மாறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மூன்றாவது வாரத்தில் நிறைய போட்டிகள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்க போகிறது. ஐபிஎல் போன்றதொரு தொடரில் எந்த ஒரு அணியையும் எந்த அணி தோற்கடிக்கும் என்று கணித்து சொல்ல முடியாது. இருந்தாலும் அணிகளின் சமீபத்திய வெற்றி தோல்விகளை கணக்கில் கொண்டு எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று பார்ப்போம்:

Match 20, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிடல்ஸ் :

பெங்களூர் அணி தான் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த ஐபிஎல்லில் வெற்றி கணக்கை துவங்காத ஒரே அணி பெங்களூர் அணி மட்டுமே. டெல்லி கேப்பிடல்ஸை பொருத்தவரை ஆரம்பகட்ட போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. ஆனால் கடைசியாக நடைபெற்ற போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது .இந்தப் போட்டியைப் பொறுத்தவரை பெங்களூரு அணி சொந்த மைதானத்தில் விளையாடுவதால் அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் .

Match 21, ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இந்த ஐபிஎல்லில் கொல்கத்தா அணி மட்டுமே பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் வலுவாக உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களையே பெரிதும் சார்ந்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கையே ஓங்கியுள்ளது. கொல்கத்தா அணியில் மேட்ச் வின்னர்ஸ் அதிகம் உள்ளனர். எனவே ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டி கடும் சோதனையாக அமையும்.

Match 22, கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நினைவில் வைத்திருக்கும். டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ முதலியோரை கொண்டுள்ள சன்ரைசர்ஸ் அணி கிங்ஸ் லெவன் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் வல்லமையை பெற்றுள்ளது.

Match 23, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இந்த ஆட்டத்தின் வெற்றியாளரை கணிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. தனியாளாக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் மேட்ச் வின்னர்கள் இரண்டு அணிகளிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். இருந்தாலும் சொந்த ஊரில் விளையாடுவதால் சென்னை அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Match 24, மும்பை இந்தியன்ஸ்s vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

மும்பை இந்தியன்ஸ் அணி அற்புதமான வீரர்களைக் கொண்டுள்ளது. மும்பை அணியின் கடைசி போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அல்சாரி ஜோசப் தன்னுடைய அணிக்கு தனியாளாக வெற்றியை தேடி தந்தார். அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பெரும் குடைச்சல் கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் பஞ்சாப் அணியிலும் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் உள்ளதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Match 25, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய பார்ம் நன்றாக உள்ளது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த ஊரில் விளையாடுவதால் அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும், அதுவே அந்த அணிக்கு நம்பிக்கையை தரும் விதத்தில் உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நிறைய மேட்ச் வின்னர்ஸ் உள்ளதால் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையே ஓங்கி உள்ளது.

Match 26, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் :

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த ஆட்டத்தில் விளையாடும். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Quick Links

Edited by Fambeat Tamil