இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது ‘நடப்புச் சாம்பியன்’ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தனது முதல் போட்டியில் ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்’ அணியை வெறும் 70 ரன்களுக்கு சுருட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்தது சென்னை. இதே உத்வேகத்தை நாளை நடைபெற உள்ள ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை அணி கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம்.
அதேநேரம் வலுவான ‘மும்பை இந்தியன்ஸ்’ அணிக்கு எதிராக 213 ரன்கள் குவித்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தல் ஃபார்மில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும் எளிதாக எண்ணி விட முடியாது. நாளைய போட்டி நடைபெற உள்ள டெல்லி ‘பெரோஸ் ஷா கோட்லா’ மைதானம் பேட்டிங்குக்கு சற்று சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி வீரர்கள் பலர் நிரம்பியுள்ள டெல்லி அணி இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியே இடம்பெறும் என நம்பலாம். ஆனால் கேப்டன் தோனி, ஆடுகளத்தின் மாற்றம் கருதி அணியில் மாற்றங்களை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தொடக்க வீரர்கள் :
ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு
கடந்த போட்டியில் மோசமாக தடுமாறி டக் அவுட் ஆன வாட்சன் இந்த போட்டியில் தனது சிறப்பான ஃபார்முக்கு திரும்புவார் என நம்பலாம். இவர் கடந்த போட்டியில் மெதுவான, நிலையான தொடக்கத்தை அளித்த அம்பத்தி ராயுடு உடன் தொடக்க வீரராக களம் இறங்குவார்.
மிடில் ஆர்டர் :
சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், எம்.எஸ் தோனி
கடந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சுரேஷ் ரெய்னா. இவருக்கு அடுத்ததாக களமிறங்கும் கேதர் ஜாதவ் கடந்த போட்டியில் 13 ரன்களுடன் நம்பிக்கை அளித்தார். கேப்டன் தோனி கடந்த போட்டியில் பேட்டிங் செய்யாவிட்டாலும் தனது சிறப்பான கேப்டன்ஷிப்பில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ஆல்-ரவுண்டர்கள் :
ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார்
கடந்த போட்டியில் அட்டகாசமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சுழற்பந்து வீச்சுக்கு சொர்க்கபூமியாக திகழ்ந்த சென்னை ஆடுகளத்தில் ‘பிராவோ’வுக்கு பெரிதாக வேலை ஏற்படவில்லை. ஆனால் அதிரடி வீரர்கள் நிரம்பிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக டுவைன் பிராவோ சென்னை அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஓவர்களை மிகச்சிறப்பாக வீசிய தீபக் சஹார் தனது இடத்தை அடுத்த போட்டியிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் :
ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஷாத்ரூல் தாகூர்
கடந்த போட்டியில் பெங்களூர் அணியை தங்களது மாயாஜால சுழற்பந்தில் அடி பணிய வைத்தனர் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர். சென்ற போட்டியில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர்கள் டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் அசத்துவார்கள் என நம்பலாம். வேகப்பந்துவீச்சாளர் தாகூருக்கும் தனது இடத்தை தக்க வைக்க இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசுவது அவசியம்.
நாளைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸின் உத்தேச அணி :
ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், எம்.எஸ் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஷாத்ரூல் தாக்கூர்.