வார்னரின் மறு வருகை!

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) 85 ரன்களில் அவுட்டாகி ஓய்வு அறையை நோக்கி சென்ற போது, வார்னர் மிகவும் சாந்தமாக இருந்தார். அவரது முகத்தில் நிம்மதி தெரிந்தது. கொல்கத்தா ரசிகர்களின் பாராட்டை மனதிற்குள் ரசித்தபடியே, தனது பேட்டை மெல்ல தூக்கியவாறு ஒய்வறைக்குள் சென்றார். ஆனால் இதுவே ஒரு வருடத்திற்கு முன்பென்றால், சதம் அடிக்க இன்னும் 15 ரன்களே தேவை என்ற நிலையில் இருக்கும் போது அவுட்டாகி சென்றால், மைதானத்திலிருந்து புலம்பி கொண்டே செல்வார் வார்னர். ஆனால் இந்த முறை அப்படி எந்த புலம்பலும் அவரிடம் இல்லை.

நமக்கு தெரிந்து வார்னர் இப்படி இருந்ததில்லை. இந்த ஒரு வருட காலத்தில் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டுள்ளார். மார்ச் 24, 2018-ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்துவதற்கு ஆலோசனை கூறினார் என வார்னர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டால் ஒரு வருடத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டார் வார்னர். சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு, சர்வதேச அரங்கில் தனது முதல் போட்டியை ஐபிஎல் தொடரில் நேற்று விளையாடினார்.

போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமானது. சன்ரைசர்ஸ் அணியின் உடை நிறத்தைப் போலவே சூரியன் பிரகாசித்து கொண்டிருந்தது. தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக பிட்ச் ஒத்துழைக்கவில்லை. வார்னரோடு சேர்ந்து இறங்கிய பேரிஸ்டோவிற்கு இது தான் முதல் ஐபிஎல் போட்டி. ஆனால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தனது பேட்டிங்கில் மட்டும் கவனமாக இருந்தார் வார்னர்.

மீண்டும் தனது அதிரடியை தொடங்கியுள்ளார் வார்னர்
மீண்டும் தனது அதிரடியை தொடங்கியுள்ளார் வார்னர்

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலியே, நாம் அனைவரும் இந்த ஒரு வருடமும் எதை இழந்திருந்தோம் என்பதை நினைவுப்படுத்தினார் வார்னர். பியுஷ் சாவ்லா வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார் வார்னர். லெக் ஸ்டம்ப் நோக்கி வீசப்பட்ட பந்தை அநாயசமாக கவர் திசையில் பவுண்டரிகளை விளாசினார். அடுத்த ஓவரில் பிரசித் கிருஷ்னாவின் ஷார்ட் பாலை ‘புல்’ செய்து பவுண்டரிக்கு திருப்பிய போது, வார்னரின் ரன் 13 பந்துகளில் 19 ரன்னாக இருந்தது.

ஐந்தாவது ஓவரில் ஃபெர்குஸனின் வேகமான பந்து வீச்சிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் வார்னர். ஆனால், ஃபுல் டாஸாக வந்த அடுத்த பந்தை கவர் திசையில் பவுண்டரிக்கு திருப்பினார். பவர்பிளேயின் கடைசி ஓவரை போடுவதற்கு வந்தார் சுனில் நரைன். இதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார் வார்னர். இந்த ஓவர் முடியும் போது 21 பந்துகளில் 34 ரன்கள் அடித்து தன்னம்பிக்கையோடு களத்தில் நின்று கொண்டிருந்தார்.

ஆனால் பவர்பிளே முடிந்த பிறகு தான் வார்னரின் சிறந்த ஆட்டம் வெளிப்பட தொடங்கியது. குல்தீப் யாதவ் ஓவரில் ரிவர்ஸ் ஷாட்டிலும் ரஸல் பந்தில் ஆளில்லாத பகுதியிலும் பந்தை விரட்டி ரன்களை அதிகரித்து கொண்டிருந்தார். அதே ஓவரில் ரஸலின் ஷார்ட் பாலை அற்புதமாக தேர்ட் மேன் திசையில் சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பதிவு செய்தார். இது ஐபிஎல் தொடரில் இவரது 37-வது அரை சதமாகும். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த கம்பீரின் சாதனையை முறியடித்தார் வார்னர்.

ஒரு வருட தடை வார்னரை முற்றிலும் மாற்றியுள்ளது
ஒரு வருட தடை வார்னரை முற்றிலும் மாற்றியுள்ளது

வழக்கமாக தங்கள் அணிக்கு ஆதரவாக கரகோஷம் இடும் கொல்கத்தா ரசிகர்கள் கூட, நவீன கால கிரிக்கெட்டின் சிறந்த அதிரடி வீரர்களுள் ஒருவரான வார்னரின் ஆட்டத்தை ஆரவாரத்தோடு கண்டு களித்தனர். மூன்றாவது வீரராக விஜய் சங்கர் களமிறங்கிய போது, ஏழு ஓவர் மீதம் இருந்தது. ஆனால் அப்போதும் கூட வார்னரின் ஆக்ரோஷம் குறையவில்லை. முழங்காலிட்டு ஸ்குயர் லெக் திசையில் விஜய் சங்கர் சிக்ஸர் அடித்ததும், அந்த ஷாட்டை வெகுவாக ரசித்த வார்னர், மறுமுனையில் இருந்து ஓடிவந்து விஜய் சங்கரின் கிளவுஸில் ஓங்கி குத்தினார்.

இதுதான் வார்னர். தன்னை விட தன் அணி தான் முக்கியம் என்று நினத்ததால் தான், சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு சிக்கலில் மாட்டிக் கொண்டார். ஆனால் அவருடைய இந்த குணம் தான் அவரை தொடர்ந்து விளையாட தூண்டுகிறது. நேற்றைய போட்டியில் இறண்டு முறை அவுட்டாவதிலிருந்து தப்பித்தார் வார்னர். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் எப்படி? கடந்தாண்டு கேப் டவுனில் இருந்து வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்தித்து வந்த மனிதருக்கு மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியிருக்கிறது.

Quick Links

Edited by Fambeat Tamil