நடந்தது என்ன?
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதன்மூலம் தொடர்ந்து அதிக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் பங்கேற்காததன் மூலம் முறியடிக்க தவறினார்.
உங்களுக்கு தெரியுமா?
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரின் ஆரம்ப வருடமான 2008 முதல் தொடர்ந்து 134 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2018 வருட சீசனில் ஒரு போட்டியில் மட்டும் இவர் பங்கேற்கவில்லை.
கதைக்கரு
2019 ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. பயிற்சியின் போது கணுக்காலில் ஏற்பட்ட சிறு காயத்தால் இவர் பங்கேற்க மாட்டார் என்று தகுந்த காரணத்தையும் தெரிவித்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.
வலதுகை பேட்ஸ்மேனான ரோகித் சர்மா 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். 2013 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியில் அறிமுகமானதிலிருந்து ஒரு போட்டியை கூட விடாமல் தொடர்ந்து 133 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் இவர் பங்கேற்கவில்லை.
ரெய்னாவின் தொடர் 134 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவிற்கு பிரகாசமாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் பங்கேற்காததால் 1 போட்டி வித்தியாசத்தில் அந்த சாதனை முறியடிக்காமலேயே போனது. இந்த சாதனை மீண்டும் சுரேஷ் ரெய்னா வசமே வந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தற்காலிக கேப்டன் கீரன் பொல்லார்டின் அதிரடியால் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் மூன்றாவது இடத்தை பிடித்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசினார். சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மாவிற்குப் பிறகு சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் டி20 போட்டிகளில் சதம் விளாசிய 3வது இந்தியர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றார்.
அடுத்தது என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பியிருந்தாலும், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று புதுப்பொலிவு அணியாக திகழ்கிறது. இந்த வெற்றிகளின் மூலம் அந்த அணிக்கு மிகுந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. ரோகித் சர்மா அடுத்த போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அந்த அணியின் பேட்டிங் கூடுதல் பலம் பெறும்.
மும்பை இந்தியன்ஸ் அணி வரும் சனிக்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது.