2019 ஐபிஎல் தொடரின் 49வது போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மழையினால் இந்த போட்டி ரத்தானது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனில் 10வது முறையாக டாஸ் தோற்றார். ஸ்டிவ் ஸ்மித் பௌலிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் இருந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கிடைக்கும் இரு புள்ளிகளின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் சிறிது இருந்தது.
விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் சொந்த மண்ணில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி காலம் தாழ்த்தாமல் முதல் இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசினார். ஏபி டிவில்லியர்ஸ் 2 பவுண்டரிகளை முதல் ஓவரில் அடித்தார்.
கடந்த போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோரை தனது பௌலிங்கில் தடுமாற செய்த ஸ்ரேயஸ் கோபால் 2வது ஓவரை வீச வந்தார். விராட் கோலி ஸ்ரேயஸ் கோபால் வீசிய முதல் பந்தில் சிக்ஸரும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
ஆனால் ஸ்ரேயஸ் கோபால் வீசிய 4வது பந்தில் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, மெதுவாக காற்றில் பறந்து வந்த அடுத்த பந்தை ஏபி டிவில்லியர்ஸ் பெரிய ஷாட் அடிக்க முற்பட்ட போது உள் வட்டத்திற்குள்ளேயே கேட்ச் ஆனார். இதன்மூலம் ஸ்ரேயஸ் கோபால் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர் வீசிய கடைசி பந்தை மார்கஸ் ஸ்டாய்னிஸ் நேராக மைதானத்தின் பவுண்டரி திசையில் அடிக்க முற்பட்ட போது கேட்ச் ஆனார். இதன் மூலம் 5 ஓவர் போட்டியில் தனது ஹாட்ரிக்கை ஸ்ரேயஸ் கோபால் பதிவு செய்தார்.
கோபால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஏபி டிவில்லியர்ஸை 4 போட்டிகளில் 4 முறையும், விராட் கோலியை 4 போட்டிகளில் 3 முறையும் தனது மாயாஜால பௌலிங்கால் வீழ்த்தியுள்ளார். இந்த ஹாட்ரிக் மூலம் பெங்களூரு அணியின் பேட்டிங் மங்கியது. இருப்பினும் தடுமாற்றத்துடன் 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவித்தது
63 என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் லைம் லிவிங்ஸ்டன் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தனது முழு அதிரடியை இந்த போட்டியில் வெளிபடுத்தினார். ஆனால் மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி கொள்ளப்பட்டது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிகாரபூர்வமாக 2019 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.