சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது சென்னை அணி. போட்டிக்கு முன்னர் இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டன. இறுதியில் தோனியின் அனுபவமும், பவுலர்களின் சுழலும் சென்னை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றது.
கொல்கத்தா அணியை வென்ற கையோடு, ராஜஸ்தான் அணியுடன் இன்று விளையாட இருக்கும் போட்டிக்காக நேற்று காலையிலேயே சென்னை அணி வீரர்கள் ஜெய்பூர் கிளம்ப தயாராகினர். அப்போது விமானம் வரும் வரையில் மற்ற வீரர்கள் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், தோனியும் அவரது மனைவி சாக்க்ஷியும் வெறும் தரையில் படுத்து குட்டி தூக்கம் போட்டனர். தனது சொந்த மாநிலத்தில் அதிக வரி கட்டும் நபர்களில் முதலிடத்தில் இருக்கும் தோனி எளிமையான முறையில் தரையில் படுத்து தூங்கியதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
எப்போதும் வெற்றி பெற்ற தலைக்கணத்தில் இருக்காமல், சக வீரர்களோடு எளிமையாக பழகுவது, தன்னை நோக்கி வரும் ரசிகர்களை அரவணைத்து செல்வது என்று தோனியின் இது போன்ற குணத்தை கண்டு, தோல்வியே அடைந்தாலும் இலகுவாக எடுத்துக்கொள்கின்றனர் அவரது இரசிகர்கள். இந்த குணம் தான் அவரை இந்த அளவிற்கு வளர்த்து விட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய போட்டி :
இன்று 25வது ஐபிஎல் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர் கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதுவரை நடந்த போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது அந்த அணி. ராஜஸ்தான் அணியின் கேப்டனான ரஹானே இந்த தொடரின் மூலம் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த தொடரில் ரஹானே சிறப்பான விளையாடினால் மட்டுமே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்றைய போட்டி வாழ்வா..? சாவா என்ற நிலையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னை அணியை பொறுத்த வரையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக உள்ளது. பீல்டிங் மட்டும் சற்று மேம்படுத்த வேண்டி உள்ளது. கூடவே தோனியின் அனுபவமும் கை கோர்க்கிறது. சென்னை அணி வீரர்களின் சராசரி வயது 30க்கும் மேல் இருப்பதால், அனுபவம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது. மற்ற அணியினர் ததும்ப ததும்ப இளம் வீரர்களை கொண்டிருந்தாலும், வேகத்தை காட்டிலும் விவேகமே சிறந்தது என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்த்து மற்ற அணியினரும் பாடம் கற்று வருகின்றனர். புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணியும், இக்கட்டான கட்டத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோதுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.