நடந்தது என்ன?
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தற்போது முன்னனி பேட்ஸ்மேனாக விளங்கும் ஜானி பேர்ஸ்டோவ் விலகுவது அந்த அணிக்கு பெரிய இழப்பாக உள்ளது.
உங்களுக்கு தெரியுமா
சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை அறிவித்தது. அனைவரும் எதிர்பார்த்த படி ஜானி பேர்ஸ்டோவ் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.
இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக நடக்க இருக்கும் ஆயத்த குழுவில் இனைந்து பயிற்சி எடுக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து உலகக் கோப்பை வீரர்கள் 2019 ஐபிஎல் தொடரின் இறுதி பகுதியில் விளையாடும் வாய்ப்பை தவற விடுவார்கள்.
கதைக்கரு
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவிற்கு 2019 ஐபிஎல் சீசன் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. வலது கை பேட்ஸ்மேனான இவர் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசினார். அத்துடன் டாப் ஆர்டரில் அணியின் வெற்றிக்காக பலமுறை சிறப்பாக விளையாடியுள்ளார்.
29 வயதான இவர் 2019 ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் 365 ரன்களை குவித்துள்ளார். டேவிட் வார்னருடன் இனைந்து தொடர்ந்து மூன்று முறை 100 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து சாதனை படைத்துள்ளார். ஹைதராபாத் அணி பேட்டிங்கில் இவர்கள் இருவரை மட்டுமே முழுவதும் நம்பியுள்ளது. இவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் விலகுவது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும்.
ஹைதராபாத் அணியில் மாற்று தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்தை சேர்ந்த மார்டின் கப்தில் உள்ளார். இருப்பினும் ஜானி பேர்ஸ்டோவ் அளவிற்கு தொடக்கத்தை அளிப்பாரா என்பது பெரும் சந்தேகம் தான்.
கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பாக நிருபர்களிடம் ஜானி பேர்ஸ்டோவ் கூறியதாவது:
"ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியே நான் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடும் கடைசி போட்டியாகும். நான் உலகக் கோப்பை குழுவில் இனைய போகிறேன். நான் பாகிஸ்தானிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். அதன்பின் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க போகிறேன்.
"உலகக் கோப்பையில் பல்வேறு போட்டிகளில் விளையாட உள்ளோம். அதன்பின் 5 போட்டிகள் கொண்ட ஆஸஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறோம்".
இங்கிலாந்து முதன்மை உலகக் கோப்பை அணி: அலெக்ஸ் ஹால்ஸ், ஜேஸன் ராய், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மொய்ன் அலி, ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் கர்ரான், ஜோ டென்லி, லைம் பிளன்கட், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
அடுத்தது என்ன?
ஜானி பேர்ஸ்டோ இல்லாமல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ஐபிஎல் லீக் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. மாற்று ஆட்டக்காரர் இருந்தாலும், பேர்ஸ்டோ போல் தொடக்கம் இல்லாமல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க கூட நேரிடலாம். .