2019 ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் பாதி வரை முடிவடைந்துள்ளது. இதன் மூலம் எந்தெந்த அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன என்பதை பற்றிய ஒரு தெளிவு கிடைத்துள்ளது.மேலும், புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஏறக்குறைய தங்களது ப்ளே ஆப் இழந்து தவித்து வருகின்றன. உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவித்த நிலையில், இன்று ஐதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. சென்னை அணியில் காயமடைந்த பிராவோவுக்கு பதிலாக இடம் பெற்றிருக்கும் பாப் டு பிளிசிஸ் மற்றும் மிட்ச்செல் சண்ட்னர் ஆகியோர் தற்போது நன்றாக விளையாடி வருகின்றனர். ஐதராபாத் அணியில் கடந்த ஆட்டங்களில் காயத்தால் இடம்பெறாத கனே வில்லியம்சன் இன்று களம்வுள்ளார். பரபரப்பான இந்த லீக் போட்டியில் அரங்கேற உள்ள மூன்று விஷயங்களைப் பற்றி இங்கு காணலாம்.
#1.உலகக்கோப்பை நாயகர்கள் தங்களது ஆட்டத்தை அளிக்க உள்ளனர்:
பிசிசிஐ அறிவித்துள்ள 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இனிவரும் போட்டிகளில் விளையாடுவதை ரசிகர்கள் உற்று நோக்குவர். அவ்வாறு, நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற ராகுலும் முகமது ஷமியும் ஓரளவுக்கு நன்றாக செயல்பட்டனர். எனவே, இன்றைய ஆட்டத்தில் இடம்பெற்றிருக்கும் உலக கோப்பையில் தேர்வுசெய்யப்பட்ட வீரர்களான மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், விஜய் சங்கர் மற்றும் புவனேஸ்வர்குமார் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
#2.உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்ட பின்னர், ராயுடு - விஜய் சங்கர் மோதவிருக்கின்றனர்:
பெரிதும் எதிர்பார்த்த நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் ராயுடு இடம்பெறாமல் போனது அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இதற்கு மாறாக தமிழக வீரரான விஜய்சங்கர் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் அணிக்கு தேவைப்பட்டால் நான்காம் இடத்தில் களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு குழு தலைவரான எம்.எஸ்.பிரசாத் பவுலிங், பேட்டிங் மற்றும் பில்டிங் உள்ளிட்ட 3 திறமைகளையும் (3 D) கொண்ட விஜய் சங்கர் அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார் என்றார்.
நேற்று அம்பத்தி ராயுடு, தனது ட்விட்டர் பக்கத்தில் உலக கோப்பை தொடரை காண 3டி கண்ணாடியை ஆர்டர் செய்து இருப்பதாக கூறினார். இதன் மூலம் இந்திய அணியில் இடம்பெறாமல் போன ராயுடு சற்று ஏமாற்றம் அடைந்ததை மறைமுகமாக சாடியுள்ளார். ஆகவே, இந்த போட்டியில் இந்த இருவரும் மோதல் இருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
#3.கனே வில்லியம்சன் தலைமையிலாவுது ஐதராபாத் அணி வெற்றி பெறுமா?
ஒரு நிலையான கேப்டன் இல்லாமல் ஹைதராபாத் அணி தவித்து அணி தவித்து வருகிறது. தகுதியான டேவிட் வார்னர் அணியில் உள்ள நிலையில், அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பை புவனேஷ்வர் குமாரிடம் கொடுத்துள்ளது. ஆரம்ப போட்டிகளில் இவரது தலைமையில் வெற்றிகளை குவித்த ஹைதராபாத் அணி, தற்போது தோல்விகளை தழுவி வருகிறது. இந்த அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணை தொடர்ச்சியான ரன்களை குவிக்க முற்பட்டாலும், பின்வரும் பேட்ஸ்மேன்கள் அவ்வாறு ரன்களை குவிக்க சிரமப்படுகின்றனர். கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தொடரில் ஐதராபாத் அணியை வழிநடத்திச் சென்ற கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக கடந்த ஆட்டங்களில் விளையாடவில்லை. ஒருவேளை காயம் குணமாகி அணியில் இடம் பெற்றால் கேப்டன் பொறுப்பு நிச்சயம் இவருக்கு வழங்கப்படும். இவரின் தலைமையிலாவது வெற்றிப் பாதைக்கு ஐதராபாத் அணி திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.