இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் 48வது லீக் போட்டி ஹைத்ராபாத் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் மோதும் இரு அணிகளும் 11 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் செல்லும் வாய்ப்பினை பெற இரு அணிகளும் போராடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஹைத்ராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் விரிதிமான் சாஹா இருவரும் களம் இறங்கினர். வழக்கம் போல் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்க மறுமுனையில் சாஹா சிறப்பாக விளையாடினார். சாஹா அதிரடியாக 13 பந்தில் 28 ரன்கள் அடித்து முருகன் அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய மனிஷ் பாண்டே தொடர்ந்து கடைசி இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிவருகிறார்.
இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாட வார்னர் அரைசதம் விளாசினார். நிலைத்து விளையாடிய மனிஷ் பாண்டே 36 ரன்னில் அஸ்வின் ஓவரில் அவுட் ஆக அதே ஓவரில் வார்னரும் 81 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வந்த நபி மற்றும் கேப்டன் வில்லியம்சன் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் முகமத் சமி ஓவரில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்த நிலையில் ஹைத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 212-6 ரன்களை குவித்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்கத்திலேயே அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 4 ரன்னில் அவுட் ஆக அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் மயான்க் அகர்வால் இருவரும் நிலைத்து விளையாடினர். அகர்வால் 27 ரன்னில் ரஷித் கான் ஓவரில் விக்கெட்டை இழக்க அதன் பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரண் அதிரடியாக 10 பந்தில் 21 ரன்கள் அடித்த கலீல் அக்மத் பந்தில் அவுட் ஆகினார்.
அதனை தொடர்ந்து மில்லர் மற்றும் அஸ்வின் இருவரும் ரஷித் கான் ஓவரில் அவுட் ஆக ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க மறுமுனையில் கே.எல்.ராகுல் 79 ரன்னில் அவுட் ஆகினார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் மட்டுமே எடுக்க ஹைத்ராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்காம் இடத்தை தக்கவைத்து கொண்டது ஹைத்ராபாத் அணி. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடி வீரர் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.