2019 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரெயொரு இறுதிப் போட்டி மட்டுமே மீதம் உள்ளது. முன்னாள் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மே 12 அன்று ஹைதராபாத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டிக்கு எப்போதுமே விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது. ரசிகர்களுக்கு இதைவிட ஒரு சிறப்பான இறுதி போட்டி கிடைக்காது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் 3 முறை ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியுள்ளன. முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழத்தி மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. மறுமுனையில் தகுதிச் சுற்று இரண்டில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தற்போது வரவிருக்கும் இறுதிப் போட்டியுடன் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் மும்பை மற்றும் சென்னை அணிகள் 4 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதியுள்ளன.
2010 ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. இருப்பினும் 2013 மற்றும் 2015 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளது. இதில் 3லிமே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் இவ்வருட ஐபிஎல் சீசனில் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் 3லுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய கடைசி 3 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடனான 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளதால் இறுதிப் போட்டியில் சென்னை அணி முன்னேற துடிக்கும். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் வலிமையான பேட்டிங் மற்றும் ஆல்-ரவுண்டர்களை கொண்டு விளங்குவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. ஐபிஎல் அணிகள் கோப்பைகளுக்காக மட்டும் போராடவில்லை, ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ள பரிசுத் தொகைக்கும் சேரத்துதான் போட்டி போட உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கிட்டத்தட்ட 50 கோடியை பரிசுத் தொகைக்காக ஒதுக்கியுள்ளது. பரிசுத் தொகையை பெறும் அணியில் 50 சதவீதம் அணி நிர்வாகத்திற்கும், மீதி 50 சதவீதம் அணி வீரர்களுக்கும் அளிக்கப்படும். இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு 25 கோடியும், தோற்கும் அணிக்கு 12.5 கோடியும் அளிக்கப்படும்.
தகுதிச் சுற்று இரண்டில் வெளியேறிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 10.5 கோடியும், எலிமினேட்டர் சுற்றில் வெளியேறிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 8.5 கோடியும் வழங்கப்படுகிறது.