குறுகிய நேர போட்டியான T-20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மென்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். முன்னணி பந்துவீச்சாளர்கள் சொதப்பும் பொழுது சில நேரம் பகுதி நேரமாக பந்துவீசும் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவது உண்டு. உதாரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மனும், தலைசிறந்த விக்கெட் கீப்பருமான ‘ஆடம் கில்கிறிஸ்ட்’ தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீசிய ஒரே பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.
இந்த கட்டுரையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக அரிதாக பந்துவீசி விக்கெட்டையும் வீழ்த்திய முன்னணி பேட்ஸ்மேன்கள் 3 பேரை பற்றி பார்ப்போம்.
3 ) அஜின்கியா ரஹானே.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் ‘அஜின்கியா ரஹானே’ பந்து வீசுவார் என்பதே பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாது. தனது நளினமான பேட்டிங்கால் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் இவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே பந்துவீசி உள்ளார்.
2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக களம் கண்ட இவர் ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணிக்கு எதிராக ஒரே ஒரு ஓவர் மட்டும் பந்துவீசினார். தான் பந்து வீசிய அந்த ஒரு ஓவரிலேயே எதிரணி பேட்ஸ்மேன் ‘லூக் போமேர்ஸ்பாட்ச்’ விக்கெட்டை போல்ட் முறையில் வீழ்த்தி அசத்தினார்.
இந்த ஓவர் தான் ரஹானே தனது ஐபிஎல் வரலாற்றில் முதலும் கடைசியுமாக பந்துவீசியதாகும். தற்போது ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ரஹானே இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
2 ) ஆரோன் ஃபின்ச்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மனும், தற்போதைய ஆஸி அணி கேப்டனுமான ‘ஆரோன் ஃபின்ச்’ T-20 கிரிக்கெட்டில் தனது பேட்டிங்கால் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் இதைவிட ஒரு அரிய சாதனையாக உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மனின் விக்கெட்டை ஃபின்ச் ஐபிஎல் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறார்.
‘புனே வாரியர்ஸ் இந்தியா’ அணிக்காக களமிறங்கிய ஃபின்ச், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அந்தப் போட்டியில் புனே அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களே சச்சினின் விக்கெட்டை வீழ்த்த திணறியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ‘ஆரோன் ஃபின்ச்’ வரவிருக்கின்ற உலகக்கோப்பை தொடருக்காக இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
1 ) ஷிக்கர் தவான்.
இந்திய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ‘ஷிகர் தவான்’ அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவர். தனது அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களை குஷிப்படுத்தும் தவான் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
‘டெக்கான் சார்ஜர்ஸ்’ அணிக்காக 2011-12 ஐபிஎல் தொடரில் இவர் வீழ்த்திய அந்த 4 விக்கெட்டுகளும் மிக முக்கியமானதாகும். இந்தியாவின் வீரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஷான் மார்ஷ் ஆகியோரே அந்த நால்வர்.
தற்போதைய ஐபிஎல் போட்டியில் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணிக்காக பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் தவானின் பேட்டிங் ஃபார்ம் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகும். அடுத்து வரவிருக்கும் உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக தவான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.