கிரிக்கெட்டை பொறுத்த வரையில் தொடக்க வீரர் பொறுப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தால் அது அந்த அணியின் உத்வேகத்தை சீர்குலைத்து விடும். தொடக்க வீரர்களே அந்த அணியின் தொடக்க பந்து வீச்சாளராக பந்து வீசுவது அரிதான ஒரு விஷயமாகும். கடந்த கால இந்திய அணியில் ரோஜர் பின்னி, மனோஜ் பிரபாகர், இர்பான் பதான் போன்ற வீரர்கள் இந்த கடினமான பணியை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்த ‘ஜேக் காலிஸ்’, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தொடக்க பேட்ஸ்மேனாகவும், தொடக்க பந்து வீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
இந்த 2019 ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாகவும், தொடக்க பந்து வீச்சாளராகவும் செயல்பட உள்ள 3 வீரர்களை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
3) டேவிட் வில்லி (சி.எஸ்.கே)
டேவிட் வில்லி உள்ளூர் முதல்தர டி-20 போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறார். சசெக்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் டி-20 போட்டியில் இவர் தொடக்க வீரராக களம் கண்டு 41 பந்துகளில் 100 ரன்களை விளாசியது இவரது திறமைக்கு ஒரு சான்றாகும்.
மேலும் தொடக்க ‘பவர் பிளே’ ஓவர்களில் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இவர் வல்லவர். ஆர்.சி.பி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே களமிறக்கியது. சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ‘லுங்கி நெகிடி’ காயம் காரணமாக விலகியதால் அவரது இடத்திற்கு டேவிட் வில்லி மிகப் பொருத்தமான ஒரு வீரராக சென்னை அணிக்கு இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
2) சுனில் நரைன் (கே.கே.ஆர்)
கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிக்காக தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ‘சுனில் நரைன்’ பேட்ஸ்மேன் ஆகவும் பட்டையைக் கிளப்பினார். கடந்த ஐபிஎல்-லில் தொடக்க வீரராக 357 ரன்களை 190 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளாசித் தள்ளினார். அதுமட்டுமல்லாது பந்துவீச்சிலும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்தத் தொடரின் ‘மதிப்பு மிக்க வீரர்’ என்ற விருதினையும் சுனில் நரைன் பெற்றார்.
‘நரைன்’ தொடக்க வீரராக களம் இறங்குவது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாகும். கடந்த ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் சுனில் நரைன் தொடக்க பேட்ஸ்மேனாகவும், தொடக்க பந்து வீச்சாளராகவும் செயல்பட்டார். அதே போன்று இந்த ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக இவர் தொடக்க நிலை பேட்ஸ்மேன் மற்றும் பவுலராக செயல்படுவார் என உறுதியாக நம்பலாம்.
1 ) ஷேன் வாட்சன் (சி.எஸ்.கே)
கடந்த 2018 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் ‘ஷேன் வாட்சன்’. சென்னை அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கும் இவர் கடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் தொடக்க பந்து வீச்சாளராக பந்துவீசி இருக்கிறார்.
‘சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு இந்த முறை பந்து வீச அதிக வீரர்கள் இருப்பதால் கேப்டன் தோனி இவரை பயன்படுத்தும் வாய்ப்பு குறைவுதான். ஆனால் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை இவருக்கு இருப்பதால் தோனி புதிய பந்தை ஏதேனும் ஒரு போட்டியில் நிச்சயம் வாட்சனுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.