கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் துவக்க வீரராக களமிறங்கும் வீரரே அதிக நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். பந்து புதியதாக உள்ளதால் அது ஸ்விங் ஆகும் தன்மை அறிந்து விளையாட வேண்டும். மேலும் தான் சிறப்பான துவக்கம் தந்தால் மட்டுமே அடுத்து வரும் வீரர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாட வேண்டும் என்ற எண்ணமும் கருத்தில் கொண்டு விளையாடுவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பொருத்தவரையில் ஒரு சில வீரர்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் வாழ்வினை தொடங்கி அதன் பின்னர் துவக்க வீரராக உருவெடுத்து அசத்தியுள்ளனர். அத்தகைய டாப் 10 வீரர்களைப் பற்றிய தொகுப்பு இது.
இதன் அடுத்த பாகத்தை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து பின்னர் சிறந்த துவக்க வீரராக மாறிய டாப்-10 வீரர்கள் ...பாகம் 1
#5) தில்ஷன்
2009 ஆம் ஆண்டுக்கு பின் தில்ஷன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியில் துவக்க வீரராக மாறினார். ஜெயசூர்யா அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவரது இடத்தினை நிரப்புவதற்கு சிறப்பான துவக்க வீரரை இலங்கை அணி நிர்வாகம் தேடி வந்தது. அப்போது மிடில் ஆர்டர்களிலேயே களமிறங்கி வந்த தில்ஷனுக்கு வாய்ப்பளித்தது. இதனை பயன்படுத்தி அந்த இடத்தை நிரந்தரமாக்கினார் தில்ஷன். தான் துவக்க வீரராக களமிறக்கப்பட்ட மூன்றாவது போட்டியிலேயே 137 ரன்கள் அடித்து அசத்திய இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான போட்டிகளிலும் இலங்கை அணியின் துவக்க வீரராகவே மாறினார். அந்த ஆண்டில் மட்டும் இவர் 2568 ரன்கள் குவித்தும் அசத்தினார். 2011 உலககோப்பை தொடரிலும் இவரே அதிக ரன் அடித்த வீரராகவும் விளங்கினார்.
#4) விரேந்திர சேவாக்
விரேந்திர சேவாக் தனது அறிமுக போட்டியில் ஆறாவது வீரராகவே களமிறங்கி விளையாடி வந்தார். அதன் பின்னர் 2002-ல் லார்ட்ஸ் மைதானத்தில் இவருக்கு துவக்க வீரயாக களமிறங்கும் வாய்ப்பு வந்தது. அதில் 84 ரன்கள் விளாசினார். அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 195 ரன்கள் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர் இந்திய அணியின் நிரந்தர துவக்க வீரராக மாறினார். டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக ஆட முடியும் என நிரூபித்தவர் இவரே. அதுமட்டுமின்றி இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதங்களை அடித்தும் சாதனை படைத்துள்ளார் சேவாக்.
#3) மார்வன் அட்டபட்டு
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான விளங்கிய அட்டபட்டு 1990 ஆம் ஆண்டு அறிமுகமாகும் போது ஒன்பதாவது வீரராக களமிறக்கப்பட்டார். அதன் பின் 1997-ல் துவக்க வீராக அறிமுகமான இவர் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் விளாசினார். அதன்பின் ஜெயசூர்யா உடன் இணைந்து இலங்கை அணியின் நிரந்தர துவக்க வீரராகவும் மாறினார். 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் போட்டிகளில் 8259 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 5502 ரன்களும் குவித்திருந்தார்.
#2) ஆடம் கில்கிறிஸ்ட்
கில்கிறிஸ்ட் ஆரம்ப காலங்களில் ஏழாவது வீரராக களமிறக்கப்பட்டு அதன் பின் சிறந்த துவக்க வீரராக மாறியவர். இவர் 1996 ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்ரிக்க ஆணிக்கெதிராக 7 வது வீரராக களமிறக்கப்பட்டார். அதன் பின்னர் இரண்டாண்டுகள் கழித்து 1998-ல் தென்னாப்ரிக்க அணிக்கெதிராகவே இவர் துவக்க வீரராகவும் களமிறங்கினார். அந்த தொடரின் இரண்டாவது போட்டியிலேயே சதம் விளாசினார் கில்கிறிஸ்ட். அதுவும் பொல்லாக், க்ளூஸ்னர் மற்றும் மெக் மெலன் போன்ற பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளாசினார். பின்னர் இரண்டு போட்டிகள் கழித்து மீண்டும் சதம் விளாசினார். ஆனால் இம்முறை நியூசிலாந்து அணிக்கெதிராக இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர துவக்க வீரராக மாறிய இவர் மேத்யூ ஹைடனுடன் பல போடடிகளில் துவக்க வீரராக விளையாடியுள்ளார். தனது ஒருநாள் கேரியரில் 9619 ரன்களுடன் ஓய்வு பெற்றார் கில்கிறிஸ்ட்.
#1) சச்சின் டெண்டுல்கர்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொருத்தவரையில் பெரும்பாலான சாதனைகள் இவரின் பெயர்களையே கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் தனது ஆரம்ப காலத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே இருந்து வந்தார். ஆரம்ப காலங்களில் இவர் 5வது மற்றும் 4வது வீரராகவே களமிறங்கி வந்தார். 1994 ஆம் ஆண்டுவரை 78 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவரால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அஜய் ஜடேஜாவுடன் துவக்க வீரராக களமிறங்கிய இவர் 49 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் பின் ஒருநாள் போட்டிகளில் எவராலும் அசைக்க முடியாத வீரராக விளங்கிய இவர் 49 சதங்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக இரட்டை சதமடித்த வீரரும் இவரே.