ஐபிஎல் தெடரானது 2008 ஆம் ஆண்டு அறிமுகமாகி பின் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தற்போது 12 வது சீசன் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 போட்டியில் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்கள் குவித்தாலும் அதைக் கட்டுப்படுத்தக் கூடிய பந்துவீச்சாளர்களும் அணியில் இருக்கும் பட்சத்தில் தான் அந்த அணி வெற்றி வாகையை சூடுகிறது. வலதுகை பந்து வீச்சாளர்களைக் காட்டிலும் இடதுகை பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் குறைவாகவே காணப்படுகின்றனர். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போதைய இந்திய அணியைப் பொருத்தவரையில் குல்தீப் யாதவ் மற்றும் கலீல் அகமது இவர்கள் இருவரைத் தவிர வேறு இடதுகை பந்துவீச்சாளர்கள் இல்லை. ஆனால் ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை பல வீரர்கள் பங்கேற்பதால் அங்கு இடதுகை பந்துவீச்சாளர்கள் பலர் விளையாடி வருகின்றனர். அதில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
(குறிப்பு: இதில் 2019 ஏப்ரல் 11 வரை நடைபெற்றுள்ள போட்டிகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.)
#3) ரவீந்திர ஜடேஜா – 100 விக்கெட்டுகள்
இந்த வரிசையில் மூன்றாவது இடம் வகிப்பவர் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா. இவர் 2009 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக தனது ஐபிஎல் பயணத்தை தொடர்ந்தார். அதன் பின்னர் சென்னை அணியிலும், குஜராத் அணியிலும் விளையாடியுள்ளார் இவர். இடது கை சுழல் பந்துவீச்சாளரான இவர் இதுவரை 160 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக ஸ்டீவன் சுமித் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 100 விக்கெட்டை வீழ்த்தினார். இதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் இவர் இந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
#2) ஜாகீர் கான் – 102 விக்கெட்டுகள்
இந்தியாவின் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் ஜாகீர் கான் தான். இந்திய அணிக்காக பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர் ஐபிஎல் தொடரிலும் விக்கெட்டுகள் வீழ்த்துவதில் குறை வைக்கவில்லை. பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்காக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். சரியாக 100 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள இவர் 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போதைய மும்பை அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வரும் இவர் இந்த வரிசையில் இரண்டாவது இடம் வகிக்கிறார்.
#1) ஆஷிஸ் நெக்ரா – 106 விக்கெட்டுகள்
தற்போதைய பெங்களூர் அணியின் பயிற்சியாளரான ஆஷிஸ் நெக்ரா தான் இந்த பட்டியலில் முதலிடத்தை தன் வசமாக்கியுள்ளார். 2008 முதல் 2017 வரை ஐபிஎல் தெடரில் பங்கேற்று விளையாடியுள்ளார் இவர். அதிலும் சென்னை, மும்பை, டெல்லி, புனே மற்றும் ஐதராபாத் அணிகளுக்காக பந்துவீசியுள்ளார். 88 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 106 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த வரிசையில் முதலிடம் வகிக்கிறார். இந்தியாவின் அனுபவமிக்க இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் 2017 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வினை அறிவித்தார். இவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஐபிஎல் தொடரில் 6 முறை ஆட்டநாயகன் விருதினைப் பெற்றுள்ளார்.