அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் மும்பை இந்தியன்ஸ் அணி தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கண்ட அணிகளின் பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
இதுவரை மொத்தம் 4 முறை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மும்பை இந்தியன்ஸ் அணி, தலை சிறந்த அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம் மும்பை அணியில் விளையாடும் சிறந்த பேட்ஸ்மேன்கள் தான். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய பேட்ஸ்மேன்களை பற்றி இங்கு காண்போம்.
#1) கீரன் பொல்லார்டு ( 176 சிக்ஸர்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கீரன் பொல்லார்டு. இவர் பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை உயர்த்தக் கூடிய திறமை படைத்தவர். இவர் தனி ஒருவராக போராடி பல போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும்தான் விளையாடி வருகிறார். வேறு எந்த அணிக்கும் இவர் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. அதில் பொல்லார்டு, சிறந்த கேட்ச் - கான விருதை தட்டிச் சென்றார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மொத்தம் 176 சிக்ஸர்களை ஐபிஎல் தொடரில் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) ரோகித் சர்மா ( 143 சிக்ஸர்கள் )
ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியை மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இவரது தலைமையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மொத்தம் 143 சிக்ஸர்களை, ஐபிஎல் தொடரில் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) ஹர்திக் பாண்டியா ( 68 சிக்ஸர்கள் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் மட்டுமின்றி, நமது இந்திய அணியிலும் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். உலக கோப்பை தொடர் நெருங்க உள்ள நிலையில், இவர் பார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மொத்தம் 68 சிக்ஸர்களை ஐபிஎல் தொடரில் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.