அதிரடிக்கு பஞ்சமில்லாத இந்த ஐபிஎல் தொடர் ஆனது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் தொடர்ந்து 11 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. பல அணிகளை சேர்ந்த தலைசிறந்த பேட்ஸ்மென்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள், இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடுவார்கள். எனவே தான் இந்த ஐபிஎல் தொடரானது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தொடராக அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) மும்பை இந்தியன்ஸ் அணி ( 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி தலை சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. தொடக்கத்தில் சச்சின் டெண்டுல்கர்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன் பின்பு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனவே ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கிறார். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 3 முறை ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி அணிகள் மோதினர். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் சிம்மன்ஸ் மற்றும் பொல்லார்ட் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 212 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை டெல்லி அணி சேஸ் செய்யும் பொழுது, டெல்லி அணியின் நட்சத்திர பேட்ஸ்மென்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். எனவே டெல்லி அணி 66 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#2) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ( 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர். விராட் கோலி 55 பந்துகளில் 109 ரன்களையும், ஏபி டி வில்லியர்ஸ் 52 பந்துகளில் 129 ரன்களையும் விளாசினார்.
இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. குஜராத் லயன்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். எனவே இந்த கடினமான இலக்கை சேஸ் செய்ய முடியாமல், வெறும் 109 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிவிட்டது குஜராத் லயன்ஸ் அணி. இதன் மூலம் பெங்களூர் அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ( 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக 13 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசிய பிரண்டன் மெக்கலம், 73 பந்துகளில் 158 ரன்கள் அடித்தார்.
இவரது உதவியால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை பெங்களூர் அணி சேஸ் செய்யும் பொழுது பிரவீன் குமாரை தவிர, மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். 15 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 82 ரன்கள் மட்டுமே பெங்களூர் அணி அடித்தது. எனவே கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.