ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ‘ரோகித் சர்மா’ தலைமையிலான ‘மும்பை இந்தியன்ஸ்’ அணியும், ‘ரவிச்சந்திரன் அஸ்வின்’ தலைமையிலான ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
‘மும்பை’ அணியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குயின்டன் டி காக் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல ‘பஞ்சாப்’ அணியில் கிறிஸ் கெயில், கே.எல் ராகுல், சாம் கரண் போன்ற தரமான வீரர்கள் இருக்கின்றனர். பலம் வாய்ந்த இவ்விரு அணிகளின் மோதல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகள் இடையே ‘மொகாலி’யில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்கு மும்பை அணி உள்ளூரில் தகுந்த பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான 3 மோதல்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
3 ) கிறிஸ் கெயில் Vs ஜஸ்பிரிட் பும்ரா.
டி-20 கிரிக்கெட்டின் மிகச் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்க்கும், டி-20 கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளருக்கும் இடையே நடைபெறக்கூடிய இந்த மோதல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்க கூடிய ஒரு மோதலாக இன்று அமையும்.
‘யுனிவர்சல் பாஸ்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் கெயில் இதுவரை ‘பும்ரா’வுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை. இதுவரை ‘பும்ரா’வின் 34 பந்துகளை எதிர்கொண்டுள்ள கெயில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேசமயம் ‘பும்ரா’ இன்னும் கெய்லின் விக்கெட்டை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ‘கிறிஸ் கெயில்’, பவர்-பிளே ஓவர்களில் நிச்சயம் ‘பும்ரா’வின் பந்து வீச்சை எதிர்கொள்ள நேரிடும். இன்றைய போட்டியில் இவ்விருவரில் யார் வெற்றி பெறுவார் என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாகும்.
2 ) கே.எல் ராகுல் Vs ஹர்திக் பாண்டியா.
களத்துக்கு வெளியே நல்ல நண்பர்களாக திகழும் ‘கே.எல் ராகுல்’ மற்றும் ‘ஹர்திக் பாண்டியா’ இன்று எதிரெதிராய் நின்று மோத உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் இந்திய அணியிலிருந்து சிறிது காலம் ஓரங்கட்டப்பட்ட இவ்விருவரும் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கும் ‘ராகுல்’ ஆரம்ப கட்ட ஓவர்களில் ‘ஹர்திக் பாண்டியா’வை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு இளம் வீரர்களுக்கு இடையே நடைபெறும் மோதல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு மோதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
1 ) கீரன் பொல்லார்ட் Vs ரவிச்சந்திரன் அஸ்வின்.
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்த மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ‘பொல்லார்ட்’ கடந்த இரு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து வருகிறார். அதேசமயம் ‘அஸ்வின்’ பஞ்சாப் அணியின் சிறந்த பந்துவீச்சாளராகவும், ஆக்ரோஷமான கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இதுவரை பொல்லார்டின் விக்கெட்டை 3 முறை வீழ்த்தியுள்ள ‘அஸ்வின்’ நான்காவது முறையாக இன்றைய போட்டியில் அவரை வீழ்த்த தயாராகி வருகிறார். அதேசமயம் தனது பழைய அதிரடி ஃபார்முக்கு திரும்பியுள்ள ‘பொல்லார்ட்’ அஸ்வின் பந்துவீச்சை விளாசித்தள்ளும் நோக்கோடு இருக்கிறார்.
இவ்விரு வீரர்களுக்கு இடையேயான மோதல் நிச்சயம் இந்த போட்டிக்கு மேலும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் என உறுதியாக நம்பலாம்.