‘ரோஹித் சர்மா’ தலைமையிலான ‘மும்பை இந்தியன்ஸ்’ அணி, ‘தோனி’ தலைமையிலான ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியை சென்னையில் இன்று எதிர்கொள்கிறது. வழக்கமாக சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே போன்று இன்று நடைபெறவுள்ள போட்டியும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த கட்டுரையில் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே அமர வைத்த பரபரப்பான சென்னை சூப்பர் கிங்ஸ் & மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 3 முக்கிய போட்டிகளை காணலாம்.
3 ) ஆட்டத்தை மாற்றிய பொல்லார்டின் ‘கைகள்’.
இந்த பரபரப்பான ஆட்டம் 2013 ஐபிஎல் தொடரின் 5-வது லீக் ஆட்டமாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ‘ரிக்கி பாண்டிங்’ முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது.
இருப்பினும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ‘கீரன் பொல்லார்ட்’ மற்றும் ‘ஹர்பஜன் சிங்’ இணையின் பொறுப்பான 65 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் மும்பை அணி 149 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணிக்கு நிர்ணயித்தது.
இலக்கு பெரிதாக இல்லாத போதும் மும்பை அணியின் அபார பந்துவீச்சால் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக சென்னை அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்த போதும் சென்னை அணியின் ஒரே நம்பிக்கையாக கேப்டன் ‘தோனி’ களத்தில் இருந்தார். கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ‘முனாப் பட்டேல்’ வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலே சிக்சர் அடிக்க முயற்சித்த தோனி பவுண்டரி அருகே பொல்லார்டின் அதி அற்புதமான கேட்ச்சுக்கு ஆட்டமிழந்தார்.
அந்த இடத்தில் ‘பொல்லார்ட்’ இல்லை என்றால் அது நிச்சயம் சிக்ஸராக மாறி இருக்கும். முடிவில் இந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2 ) ‘டுவையின் ஸ்மித்’தின் கடைசி கட்ட அதிரடி.
இந்த போட்டி 2012-இல் மும்பையில் நடைபெற்ற 49-வது லீக் ஆட்டம் ஆகும். டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ‘ஹர்பஜன் சிங்’ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு முரளி விஜய், சுரேஷ் ரெய்னா & டுவைன் பிராவோ ஆகியோர் கணிசமான பங்களிப்பை தர 174 ரன்கள் என்ற சிறப்பான இலக்கை மும்பைக்கு நிர்ணயித்தது சென்னை.
பின்னர் களமிறங்கிய மும்பை அணி தனது முதல் விக்கெட்டை விரைவில் இழந்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ‘சச்சின் டெண்டுல்கர்’ மற்றும் ‘ரோகித் சர்மா’வின் 126 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.
கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்குத் தேவை 16 ரன்கள். அந்த ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ‘பென் ஹில்ஃபென்ஹாஸ்’ முதல் 3 பந்துகளில் ‘மலிங்கா’வின் விக்கெட்டை வீழ்த்தி வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
கடைசி 3 பந்துகளில் மும்பையின் வெற்றிக்கு தேவை 14 ரன்கள். எனவே சென்னை தான் இந்த போட்டியில் வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அங்கு திருப்புமுனையாக வந்து நின்றார் ‘டுவைன் ஸ்மித்’. கடைசி 3 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து மும்பை அணியை திரில்லிங் வெற்றி பெற வைத்தார் ஸ்மித்.
சென்னை ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்த ‘டுவையின் ஸ்மித்’ 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
1 ) மிகச் சிறப்பாக மீண்டெழுந்த ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’
சூதாட்ட புகாரின் காரணமாக இரண்டு வருட கால தடைக்குப் பிறகு தன் மீதான விமர்சனங்களுக்கு விடை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் 2018-ஆம் ஆண்டில் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் பாண்டியா சகோதரர்களின் சிறப்பான பங்களிப்பால் மும்பை அணி 176 ரன்கள் என்ற இலக்கை சென்னைக்கு நிர்ணயித்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் மார்க்கண்டே ஆகியோரின் அபார பந்துவீச்சில் சென்னை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
கடைசி 3 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவை. முன்னணி பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் ‘ரிடையர்டு-ஹர்ட்’ ஆகி வெளியேற சென்னை அணி அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்தார் ‘டுவைன் பிராவோ’. 18 மற்றும் 19-வது ஓவர்களில் 40 ரன்கள் விளாசப்பட்டது. அதில் 39 ரன்களை விளாசிய பிராவோ ஆட்டமிழந்தார்.
‘பிராவோ’வின் அபார ஆட்டத்தால் சென்னை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை. ஆனால் கைவசம் இருப்பதோ ஒரே விக்கெட். இந்நிலையில் மீண்டும் களமிறங்கினார் கேதார் ஜாதவ். ‘முஷ்டாஃபிசூர் ரஹ்மான்’ வீசிய முதல் 3 பந்துகளிலும் ஜாதவ் ரன் எடுக்கவில்லை.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 4-வது பந்தை எதிர்கொண்ட ஜாதவ் அதனை தனது பிரத்தியேக ‘ஸ்கூப்’ ஷாட்டில் சிக்சர் விளாசினார். மீண்டும் அடுத்த பந்தை கவர் திசையில் பவுண்டரி விளாச சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது. ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே அமர வைத்த பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு ஆட்டமாக இந்த போட்டி அமைந்தது.