ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ( 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 231/2 ( 20 ஓவர்கள் )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 113/10 ( 19.5 / 20 ஓவர்கள் )
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது மிகச் சிறப்பாகவும், சுவாரசியமாகவும் நமது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் லீக் சுற்றின் 11 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே முதல் ஓவரில் இருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். அதிரடியாக 7 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை விளாசிய பேர்ஸ்டோ, 56 பந்துகளில் 114 ரன்கள் விளாசினார்.
இவர் அவுட்டாகி சென்ற பிறகு அதிரடியாக விளையாடிய வார்னர், 55 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 5 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். ஒரே இன்னிங்சில் 2 வீரர்கள் சதம் அடித்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்தது. 20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கியது. பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் பெங்களூரு அணி வெறும் 113 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. எனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது நபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
#2) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ( 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 232/2 ( 20 ஓவர்கள் )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 121/10 (17 / 20 ஓவர்கள் )

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் வல்தாட்டி ஆகிய இருவரும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய கில்கிறிஸ்ட், 55 பந்துகளில் 106 ரன்கள் விளாசினார். இதில் 9 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது.

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது. பெங்களூர் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்பு விராட் கோலியும் 11 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரம் மட்டும் நிலைத்து நின்று விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ், 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் பெங்களூர் அணி 17 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய பியூஸ் சாவ்லா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.