ஐபிஎல் 2019 : ராஜஸ்தான் அணி செய்ய வேண்டிய மாற்றம்

Ben Stokes
Ben Stokes

12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று நடக்கும் லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.

ஏற்கனவே சென்னையில் நடந்த லீக் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடி ராஜஸ்தான் அணி தோற்றது. அந்த போட்டியின் கடைசி ஓவரை அபாரமாக வீசி தன்னுடைய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் டுவைன் பிராவோ. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தங்கள் அணியின் பிளே ஆப் சுற்று கனவை தக்க வைத்துக் கொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களின் சொந்த ஊரில் நடப்பது மேலும் அவர்களுக்கு வலு சேர்க்கும். சென்னை அணி கடைசியாக ராஜஸ்தான் அணியை ஜெய்ப்பூரில் கடந்த 2012 ஆம் ஆண்டு வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் உள்ளது.

ஆனால் கடைசியாக இங்கு நடைபெற்ற மூன்று லீக் போட்டிகளில் இரண்டில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது. இது அவர்களுக்கு சற்றே கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையே மற்ற ஐபிஎல் தொடர்களை போலவே இந்த சீசனிலும் ஓங்கி உள்ளது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் கம்பீரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமர்ந்துள்ளது. அவர்கள் ஐந்து வெற்றிகளையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு தோல்வியும் அடைந்துள்ளது .

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஜெய்ப்பூரில் வீழ்த்தி 6 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக போராடும். சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் தன் வெற்றி பயணத்தை தொடர போராடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை இன்றைய ஆட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிலை தான் மோசமாக உள்ளது. சிறந்த விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பதில் அந்த அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது.

அந்த அணி இன்று ஒரு தைரியமான முடிவை எடுக்க வேண்டும். அது என்னவென்றால் அணியில் பார்மின்றி தவித்து வரும் பென் ஸ்டோக்ஸூக்கு பதிலாக ஆஷ்டன் டர்னரை சேர்த்து பார்க்கலாம். பென் ஸ்டோக்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு உள்ளார். அவருடைய பந்துவீச்சும் மெச்சும்படி இல்லை. எனவே அவரை நீக்குவது சரியான முடிவே ஆகும். ஆஷ்டன் டர்னர் தற்போது நல்ல பார்மில் உள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனி ஆளாக போராடி தன் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றதே அவரது திறமைக்கு எடுத்துக்காட்டு. அவர் இந்த வருடம் முடிந்த பிக்பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links