கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஐபிஎல் தொடரானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அதிரடிக்கும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஐபிஎல் தொடரானது வருடத்திற்கு ஒருமுறை என்ற வீதம், தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும். இவற்றுள் ஒரு சில அணிகள், சில போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளனர். அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ( 2010 ஆம் ஆண்டு )
ராஜஸ்தான் ராயல்ஸ் – 92/10 ( 19.5 / 20 ஓவர்கள் )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 93/0 ( 10.4 / 20 ஓவர்கள் )
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நமன் ஓஜா மற்றும் மைக்கேல் லம்ப் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் ஆறு ஓவர்களிலேயே, தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய யூசுப் பதானும், 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் 19.5 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய அனில் கும்ப்ளே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மணிஷ் பாண்டே மற்றும் ஜேக்கியூஸ் காலிஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். எளிதான இலக்கு என்பதால், இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இறுதியில் பெங்களூர் அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எளிதாக வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே 42 ரன்களும், காலிஸ் 44 ரன்களும் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
#2) மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் ( 2011 ஆம் ஆண்டு )
மும்பை இந்தியன்ஸ் – 133/5 ( 20 ஓவர்கள் )
ராஜஸ்தான் ராயல்ஸ் – 134/0 ( 13.1 / 20 ஓவர்கள் )
2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுமன் ஆகிய இருவரும் களமிறங்கினர். சச்சின் டெண்டுல்கர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து விட்டு, 31 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு வந்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி, 47 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே வெளுத்து வாங்கிய ஷேன் வாட்சன், 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எளிதாக வெற்றி பெற்றது.