அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( 2016 ஆம் ஆண்டு )
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 175/6 ( 20 ஓவர்கள் )
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 174/4 ( 20 ஓவர்கள் )
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே நிதானமாக விளையாடி, பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். விராட் கோலி 20 ரன்களும், ராகுல் 42 ரன்களும் அடித்தார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 35 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள், அடங்கும். மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய சச்சின் பேபி 33 ரன்கள் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முரளி விஜய், அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த டேவிட் மில்லர், முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இறுதியில் ஸ்டோனிஷ், அதிரடியாக 34 ரன்கள் அடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 6 பந்துகளுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த கடைசி ஓவரில் ஸ்டோனிஷ், ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார். இருப்பினும் பஞ்சாப் அணி இந்த கடைசி ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்ததால், ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.
#2) மும்பை இந்தியன்ஸ் Vs ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட் ( 2017 ஆம் ஆண்டு )
மும்பை இந்தியன்ஸ் – 129/8 ( 20 ஓவர்கள் )
ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட் – 128/6 ( 20 ஓவர்கள் )
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணியும், புனே அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சிம்மன்ஸ் மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். இருவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மாவும், 24 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். குருணால் பாண்டியா மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் அடித்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்தது.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே அணி களமிறங்கியது. அஜிங்கிய ரஹானே மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ரகானே, 44 ரன்கள் அடித்து, அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித், நிதானமாக விளையாடி 50 ரன்கள் அடித்தார். பின்னர் போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் ஸ்மித் மற்றும் தோனி ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர், டக் அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் புனே அணி வெற்றி பெற 1 பந்துக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த இறுதிப் பந்தில் புனே அணி வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது, எனவே மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.