ஐபிஎல் தொடரானது வருடத்திற்கு ஒரு முறை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. எனவேதான் இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் ( 2015 ஆம் ஆண்டு )
சென்னை சூப்பர் கிங்ஸ் – 150/7 ( 20 ஓவர்கள் )
டெல்லி கேபிடல்ஸ் – 149/9 ( 20 ஓவர்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக 6 பவுண்டரிகளை விளாசிய, டுவைன் ஸ்மித் 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா வெறும் 4 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய டு பிளசிஸ், 34 ரன்கள் அடித்தார். இறுதியில் வந்து அதிரடியாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, 30 ரன்கள் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மயங்க் அகர்வால் மற்றும் சிதம்பரம் கௌதம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். இருவருமே முதல் மூன்று ஓவர்களுக்குள் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த அல்பி மோர்கல் அதிரடியாக விளையாடினார். ஆனால் அவருக்கு ஜோடியாக எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று விளையாடவில்லை.
அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். இறுதிவரை அல்பி மோர்கல், தனி ஒருவராக போராடி 55 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். இறுதியில் டெல்லி அணி வெற்றி பெற 6 பந்துகளுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் டெல்லி அணியை 13 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.
#2) குஜராத் லயன்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ் ( 2016 ஆம் ஆண்டு )
குஜராத் லயன்ஸ் – 172/6 ( 20 ஓவர்கள் )
டெல்லி கேபிடல்ஸ் – 171/5 ( 20 ஓவர்கள் )

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் குஜராத் லயன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடினர். டுவைன் ஸ்மித் 30 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். பிரண்டன் மெக்கலம் 36 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இவர்களது அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்கள் குவித்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. சஞ்சு சாம்சன் மற்றும் டி காக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த கருண் நாயரும் 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய டுமினி, 48 ரன்கள் அடித்தார். இறுதியில் வந்து வெளுத்து வாங்கிய கிறிஸ் மோரிஸ், 32 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இறுதியில் டெல்லி அணி வெற்றி பெற கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தில் கிறிஸ் மோரிஸ், வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே அடித்ததால், குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது..