அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக, நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் ஒரு சில அணிகள், சில போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிகளை பெற்றுள்ளனர். அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் ( 2012 ஆம் ஆண்டு )
ராஜஸ்தான் ராயல்ஸ் – 162/6 ( 20 ஓவர்கள் )
மும்பை இந்தியன்ஸ் – 163/0 ( 18 / 20 ஓவர்கள் )
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் டிராவிட் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில், தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 30 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார். சிறப்பாக விளையாடிய வாட்சனும், 45 ரன்கள் அடித்த நிலையில், அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டுவைன் ஸ்மித் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே அதிரடியாக விளையாடி, தங்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல், 18 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தனர். ஸ்மித் 87 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 58 ரன்களும் அடித்தார். டுவைன் ஸ்மித் – க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
#2) சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( 2013 ஆம் ஆண்டு )
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 138/10 ( 19.5 / 20 ஓவர்கள் )
சென்னை சூப்பர் கிங்ஸ் – 139/0 ( 17.2 / 20 ஓவர்கள் )
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த மனோன் வோக்ரா, 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக விளையாடிய டேவிட் ஹசி 42 ரன்கள் அடித்தார். பின்பு அவரும் அவுட்டாகி வெளியேறினார். மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் ஏதும் அடிக்கவில்லை. இறுதியில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. மைக்கேல் ஹசி மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடிய முரளி விஜய், 50 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய மைக்கேல் ஹசி, 54 பந்துகளில் 86 ரன்கள் விளாசினார். இறுதியில் 17 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மைக்கேல் ஹசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.