இதுவரை அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த எந்த வீரரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றதில்லை. அந்த கனவை இளம் வீரரான ரியான் பராக் விரைவில் நிறைவேற்றுவார் என தெரிகிறது.
கடந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அரங்கு நிறைந்த கூட்டத்திற்கு நடுவே, பும்ரா, மலிங்கா, ஹர்திக் பாண்டியா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு ரியான் பராக் விளையாடியதை பார்த்த போது நிச்சியம் இந்த இளைஞர் எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறுவார் என தோன்றியது.
அந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸிமித்தோடு பேட்டிங் பிடித்த ரியான், பந்தை நாலாபுறமும் சிதறடித்து 29 பந்துகளில் 43 ரன்கள் அடித்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால், அன்று கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியானின் பங்களிப்பு பெரும் உதவியாக இருந்தது.
அன்றைய போட்டியில், அவரது பேட்டிங் முதிர்ச்சியை பார்கும் போது, இவருக்கு 17 வயது தான் ஆகிறதா என்பதே ஆச்சர்யமாக உள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டி தான் ஐபிஎல் தொடரில் அவரது இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக, ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபில்-லில் குறைந்த வயதில் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட நாளிலிருந்தே எப்போது விளையாடப் போகிறோம் என ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தார் பராக். “உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடியதால் நிச்சியம் என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் கடைசி பெயராக தான் என்னை ஏலத்தில் அழைத்தார்கள். இதனால் சற்று பதற்றமாக இருந்தது” என்கிறார். தற்போது ராஜஸ்தான் அணியில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ரியான் பராக்.
“ராஜஸ்தான் அணியில் அனைவரும் நட்போடு பழகுகிறார்கள். வீட்டிலிருந்த உணர்வே எனக்கு ஏற்படுகிறது. பெரியவன் – சிறியவன் என்ற பாகுபாடே எங்கள் அணியில் இல்லை. பென் ஸ்டோக்ஸ், பட்லர் மற்றும் ஸ்மித் போன்ற மூத்த வீரர்களோடு எந்த நேரத்திலும் விவாதிக்கலாம். இவர்களைப் போன்ற சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவதே தன்னுடைய குறிக்கோள்” என்கிறார்.
“நான் சிறு வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, உனக்கென்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என என் தந்தை கூறுவார். இந்திய அணியில் இடம் பிடிப்பதே தன்னுடைய இலக்கு என நான் அவரிடம் கூறுவேன். எனது தந்தை விளையாடியதை பார்த்த பிறகே கிரிக்கெட் மீது எனக்கு விருப்பம் ஏற்பட்டது. அவர் தான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” என கூறுகிறார் பராக்.
“அஸாம் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு உகந்த சூழல் இல்லை. இது அனைவருமே அறிந்த விஷயம். ஏனென்றால், அங்கு எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்த சமயத்தில் எனக்கு பெரும் உதவியாக இருந்த அஸாம் கிரிக்கெட் சங்கத்திற்கும் என் முதல் பயிற்சியாளர் நவாப் அலிக்கு நன்றியை கூறிக் கொள்கிறேன். நான் விளையாடுவதை பார்த்து இன்னும் பல அஸாம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினால் அது எனக்கு மகிழ்ச்சியே. எனக்கே கொஞ்ச வயது தான் ஆகிறது. இருந்தாலும், உங்களுக்கென்று கனவு இருக்க வேண்டும். அதை துரத்தி செல்லுங்கள் என அவர்களிடம் கூறுவேன் என்கிறார் ரியான் பராக்.
“ரியான் பராக்கிற்கு பிராகாசமான எதிர்காலம் உள்ளது. நிச்சியம் இந்த இளைஞர் எதிரணியை அச்சமூட்டுவார். கடுமையாக பயிற்சி செய்வதோடு சிறந்த உடல் தகுதியோடும் வலிமையாகவும் இருக்கிறார். அறிமுக போட்டியிலேயே எந்த பதற்றமும் இல்லாமல் விளையாடினார். என்னைப் போன்ற மூத்த வீர்ர்களுக்கு ஒரு சில பாடங்களை அவர் கற்றுக் கொடுத்துள்ளார். எதையும் உடனடியாக கற்று கொள்பவர்” என ரியான் பராக் குறித்து பெருமையாக பேசுகிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான ஸ்டீவ் ஸ்மித்.