7வது ப்ரோ கபடி சீசன் ஜீலை 20 அன்று ஹைதராபாத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 5வது களமாக சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு மைதானம் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ் தலைவாஸ் சென்னை களத்தில் சொதப்பி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பெங்களூரு புல்ஸ் (32-21), ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் (28-26), யு மும்பா (29-24) ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ், அனுப் குமார் தலைமையிலான புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31-31 என சமன் செய்தது. தமிழ் தலைவாஸ் தனது சொந்த களத்தில் ஒரு போட்டியில் கூட வெற்றியை இந்த சீசனில் ருசிக்கவில்லை.
பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. தமிழ் நாட்டைச் சேர்ந்த அணியான தமிழ் தலைவாஸ் அணிக்கு கடந்த காலங்களில் ஒரு தூணாக விளையாடிய மன்ஜீத் சில்லருக்கு இப்போட்டியில் முழங்கையில் அடிபட்டது. இதனால் சென்னை களத்தில் நடந்த மற்ற போட்டிகளில் மன்ஜீத் சில்லர் பங்கேற்கவில்லை.
சென்னை களத்தில் நடந்த போட்டிகளில் சில சர்ச்சைக்குரிய முடிவுகளும் நடுவரால் வழங்கப்பட்டது. பெரும்பாலும் இக்களத்தில் நடந்த அனைத்து போட்டிகளும் இறுதி நிமிடம் வரை பரபரப்பாக சென்றது குறிப்பிடத்தக்கது. ப்ரோ கபடி லீக்கின் நட்சத்திர வீரர் பவான் ஷெராவத் சென்னை களத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவித்தார். பச்சை நிற பட்டைக்கு சொந்தக்காரரான இவர் இதுவங 103 ரெய்ட் புள்ளிகளை வென்றுள்ளார்.
மறுமுனையில் ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் அணியின் சந்தீப் தல் 33 டேக்கல் புள்ளிகளை சென்னை களத்தில் வென்று அசத்தியுள்ளார்.
சில இளம் வீரர்கள் தங்களது கடின உழைப்பால் சென்னை களத்தில் ரசிகர்களையும், கபடி வள்ளுநர்களையும் கவர்ந்துள்ளார். நாம் இங்கு 2019 ப்ரோ கபடி சீசனில் சென்னை களத்தில் நடந்த போட்டியில் கலக்கிய 3 இளம் வீரர்களைப் பற்றி காண்போம்.
#3 சவுரப் நதால் - பெங்களூரு புல்ஸ் (டிபென்டர்)
சவுரப் நதால் பெங்களூரு புல்ஸ் அணிக்காக தனது முதல் அறிமுக போட்டியில் ஒரு மாற்று வீரராக களம் கண்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தனது டிபென்டிங் திறனை ரசிகர்கள் முன்னிலையில் வெளிபடுத்தினார்.
தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் சவுரப் நதாலின் நாட் அவுட் சதவீதம் 100 ஆகும். இப்போட்டியில் ஹை 5 புள்ளிகளை வென்ற சவுரப் நதால் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சிறந்த டிபென்டருக்கான பரிசையும் வென்றார்.
கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரு புல்ஸ் அணியில் முன்னணி வீரராக திகழும் ஆஸிஸ் குமார் தற்போதைய சீசனில் சிறந்த பங்களிப்பை அளிக்கவில்லை. இவரது இடத்தை சவுரப் நதால் ஆக்கிரமித்துக் கொண்டார். மேலும் பெங்களூரு புல்ஸ் ரசிகர்களின் பிடித்தமான டிபென்டராகவும் சவுரப் நதால் வலம் வருகிறார்.
#2 V அஜீத் குமார் - தமிழ் தலைவாஸ் (ரெய்டர்)
V அஜீத் குமார் இவ்வருட சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் அறிமுகமானார். இக்கட்டான சூழ்நிலையிலும், நெருக்கடியான சமயங்களிலும் அணியை மீட்டெடுப்பதில் வல்லவராக V அஜீத் குமார் திகழ்ந்தார்.
தமிழ் தலைவாஸ் அணிக்கு புள்ளிகள் தேவைப்படும் போது தனது சிறப்பான ஆட்டத்தால் வெல்பவர் V அஜீத் குமார். இவர் புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரெய்ட் சென்று 8 புள்ளிகளை வென்று அணியின் டாப் ரெய்டராக விளங்கினார்.
சென்னை களத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வியை சந்திருந்தாலும், அஜீத் குமார் 4 போட்டிகளில் பங்கேற்று 19 ரெய்ட் புள்ளிகளை வென்றார். அஜய் தாகூர் மற்றும் ராகுல் சௌத்ரிக்கு சரியாக ஆதரவளித்து அஜீத் குமார் சென்னை களத்தில் விளையாடினார்.
டெல்லி களத்தில் பெங்கால் டைகர்ஸ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற வேண்டுமெனில் V அஜீத் குமார் கண்டிப்பாக அணியில் இடம்பெற வேண்டும்.
#1 விகாஸ் கண்டோலா - ஹரியானா ஸ்டிலர்ஸ் (ரெய்டர்)
அந்த சமயத்தில் மிகவும் பின்தங்கிய அணியான தபாங் டெல்லியிலிருந்து தனது ப்ரோ கபடி சீசனை தொடங்கிய விகாஸ் கட்டோலா நான்காவது சீசனில் மிகப்பெரிய வீரராக உருவெடுத்தார். ஹரியானா ஸ்டிலர்ஸ் அணியின் முன்னணி ரெய்டரான விகாஸ் கண்டோலா 2019 ப்ரோ கபடி சீசனில் சென்னை களத்தில் விளையாடிய இரு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 17 ரெய்ட் சென்று 9 புள்ளிகளை குவித்து தனி ஒருவராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி செய்த சொதப்பலை பயன்படுத்தி கொண்டு வெற்றி பெற்றது ஹரியானா ஸ்டிலர்ஸ்.
விகாஸ் கண்டோலா மீண்டுமொருமுறை தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிபடுத்தி 9 புள்ளிகளை வென்றதுடன் அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். மேலும் இப்போட்டியின் அதிக புள்ளிகளை குவித்தவராகவும் இருந்தார். சென்னை களத்தில் விகாஸ் கண்டோலா விளையாடிய இரு போட்டிகளில் 18 புள்ளிகளை வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் சென்னை களத்தில் விகாஸ் கண்டோலா சிறந்த ரெய்டர் என்பதில் சந்தேகமில்லை.