தமிழ் தலைவாஸ் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த துடிக்கும் "ராகுல் சௌத்ரி"

Rahul Choudhury
Rahul Choudhury

ப்ரோ கபடி லீக்கில் 6 சீசன் வரை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக பெரும் பங்களிப்பு அளித்து விளையாடிய ராகுல் சௌத்ரி 7வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக இவ்வருடத்தின் தொடக்கத்தில் நடந்த ஏலத்தில் 94 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் பங்கேற்ற முதல் இரு சீசன்களில் அவ்வளவாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தகுதிச் சுற்றுடனே வெளியேறியது. ஆனால் இவ்வருடம் ராகுல் சௌத்ரி இந்த அணியில் இடம்பெற்றுள்ளதால் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராகுல் சௌத்ரி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய 6 சீசன்களில் 3 சீசனில் சேம்பியன் பட்டத்தை வென்றுத் தந்துள்ளார். இந்த ஆட்டத்திறன் இவ்வருடம் தமிழ் தலைவாஸ் அணிக்காகவும் தொடருவார் என ரசிகர்கள் நினைக்கின்றனர். தமிழ் தலைவாஸ் அணிக்காக இவ்வருடம் அதிக ரெய்ட் புள்ளிகளை எடுத்தவர் ராகுல் சௌத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 42 புள்ளிகளை எடுத்துள்ளார். இதில் இரு சூப்பர் 10 அடங்கும்.

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான ராகுல் சௌத்ரி தனது இயல்பான மற்றும் சுதந்திரமான ஆட்டத்தை தன் அணிக்காக ஆரம்பத்தில் வெளிபடுத்தி வந்தார். அஜய் தாகூருடன் சேர்ந்து விளையாடுவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என ராகுல் சௌத்ரி நம்புகிறார். தமிழ் தலைவாஸ் இரு போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியை தழுவியது. ஆனால் ராகுல் சௌத்ரி இதனை ஒரு நன்மையாகவே காண்கிறார். ஏனெனில் தோல்வியை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.

தமிழ் தலைவாஸ் அணி குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிகையில் ராகுல் சௌத்ரி கூறியதாவது:

"தமிழ் தலைவாஸ் அணியில் உள்ள அனைவருமே தங்களது சிறப்பான ஆட்டத்தை அளித்து வருகின்றனர். அணி நிர்வாகம் வீரர்களுக்கு எவ்வித நெருக்கடியையும் அளிக்கவில்லை. எதிர்பாராத விதமாக இரு போட்டியில் வெற்றிக்கு விளிம்பில் சென்று தோல்வியை தழுவினோம். அச்சமயத்தில் அணி நிர்வாகம் எங்களுக்கு மேன்மேலும் நம்பிக்கையை அளித்தது.
"அஜய் தாகூருடன் இணைந்து விளையாடுவதை மிகவும் மகிழ்ச்சிகரமாக எண்ணுகிறேன். இவர் என்னை தன் இளம் சகோதரராக நடத்துகிறார். மேலும் பல கபடி நுணுக்கங்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம். அவருடனான நட்பு எங்கள் விளையாட்டில் நீங்கள் காணலாம்.
"எங்கள் அணி மிகவும் அனுபவம் நிறைந்த வீரர்களை கொண்டுள்ளது. அனைத்து வீரர்களும் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். அனைத்து போட்டியிலும் எங்கள் அணி சரியான திட்டத்தை வழிவகுத்து வெற்றியை பெறும் என்ற நோக்கிலே களமிறங்குகிறது.‌ கடினமான நெருக்கடி கட்டத்தில் போட்டியை மாற்றும் திறனை இயல்பாகவே தமிழ் தலைவாஸ் வீரர்கள் கொண்டுள்ளனர்." என ராகுல் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

தமிழ்தலைவாஸ் அணி 7வது புரோ கபடி சீசனில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3 வெற்றியும், 2 தோல்வியும், 1 சமநிலையிலும் முடித்து 21 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் தனது அடுத்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் ஆகஸ்ட் 17 அன்று சந்திக்க உள்ளது.

Quick Links

App download animated image Get the free App now