7வது ப்ரோ கபடி சீசனில் தமிழ் தலைவாஸ் தனது சொந்த களத்தில் ஆட்டம் 52ல் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் அணியுடன் மோதியது. தமிழ் தலைவாஸ் தனது சொந்த களத்தில் ஏற்கனவே விளையாடிய போட்டியில் தோல்வி மற்றும் டிரா ஆகியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் களம் கண்டது.
மறு முனையில் ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் யு பி யோதா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது. மிகவும் வலிமை வாய்ந்த அணி இப்போட்டியில் தோல்வியடைந்தது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்திய நேரப்படி 8:30க்கு ஆட்டம் தொடங்கியது.
ஆரம்ப 7
தமிழ் தலைவாஸ்
ராகுல் சௌத்ரி, அஜய் தாகூர், வினித் சர்மா, மோஹீத் சில்லர், வி அஜீத் குமார், அஜீட், ரன் சிங்
ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ்
நிலேஷ் சலுன்கி, விஷால், தீபக் ஹோடா, சுனில் சித்தகவ்லி, சந்தீப் தல், நிதின் ரவால், அமீத் ஹோடா.
டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ் எதிரணியை ரெய்ட் வர பணித்தது.
போட்டியின் ஆரம்பத்தில் ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் அணியின் இரு பக்கவாட்டு மூலை வீரர்களான சந்தீப் தல் மற்றும் அமீத் ஹோடா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 0-4 என முன்னிலை வகித்தது. ஆனால் சிறிய இடைவெளியில் தமிழ் தலைவாஸின் நம்பிக்கை நட்சத்திரங்கள் "ஐஸ்மேன்" அஜய் தாகூர் மற்றும் "சோ மேன்" ராகுல் சௌத்ரி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6-6 என சமன் செய்தனர்.
ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் சற்று கவனத்துடன் செயல்பட்டு தமிழ் தலைவாஸின் நட்சத்திர ரெய்டர்களை வெளியே அமர்த்தினர். தீபக் நர்வால் சிறப்பாக தொடர்ந்து இரு ரெய்ட் புள்ளிகளை பெற்றுவிட்டு பின்னர் வெளியே அமர்த்தப்பட்டார்.
முதல் பாதி ஆட்டநேர முடிவிற்கு முன்பாக ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் அமீத் ஹோடா-வை, அஜய் தாகூர் வீழ்த்தி வெளியே அமர்த்தினார். முதல் பாதியில் 11-13 என ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் முன்னிலை வகித்தது. தமிழ் தலைவாஸ் இரு புள்ளிகள் பின்தங்கி இருந்தது.
இரண்டாவது பாதியிலும், தீபக் ஹேடாவிடமிருந்து கிடைத்த இரு ரெய்ட் புள்ளிகள் மற்றும் அஜய் தாகூர், பவன் TR-னால் சூப்பர் டேக்கல் செய்யப்பட்டதால் கிடைத்த இரு புள்ளிகள் ஆகியவற்றால் ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் மேலும் முன்னிலை வகித்தது. அதன்பின் ரெய்ட் வந்த நிதின் ரவால் தமிழ் தலைவாஸால் டேக்கல் செய்யப்பட்டார், இதைத்தொடர்ந்து ராகுல் சௌத்ரி இரு ரெய்ட் புள்ளிகளை எடுத்ததன் மூலம் சில நிமிடங்களிலே மண்ணின் மைந்தர்கள் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் புள்ளிகளை சமன் செய்தது.
பின்க் பேந்தர்ஸ் அணிக்காக நைலேஷ் சலுன்காவும், தமிழ் தலைவாஸ் அணிக்காக ராகுல் சௌத்ரியும் புள்ளிகளை குவித்து வந்ததால் இப்போட்டி ஒரு நெருக்கமானதாக சென்று கொண்டிருந்தது. 4 நிமிடங்கள் மீதமிருந்த போது 22-25 என சிறப்பாக முன்னிலை வகித்தது ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ்.
இந்த வேறுபாட்டை இரு புள்ளிகளாக வினித் சர்மா, தீபக் ஹோடாவை வீழ்த்தி மாற்றினார். ஆனால் சந்தீப் தல், ராகுல் சௌத்ரியை சரியான முறையில் டேக்கல் செய்து மீண்டும் 3 புள்ளிகளில் ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் முன்னிலை வகித்தது. கடைசி ஒரு நொடி இருக்கும் முன்பாக ரெய்ட் சென்ற வி அஜீத் குமார், விஷாலை வீழ்த்தினார். ஆனால் ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் கடைசி ரெய்டை எம்டி ரெய்டாக மாற்றி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநேர முடிவில் இரு அணிகளின் புள்ளி விவரங்கள் 28-26. தமிழ் தலைவாஸ் அணி சார்பில் அஜய் தாகூர் மற்றும் ராகுல் சௌத்ரி தலா 6 புள்ளிகளை பெற்றனர். ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் அணியில் நைலேஷ் சலுன்கா 7 புள்ளிகளை பெற்றார்.