ப்ரோ கபடியின் 7வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த களமான சென்னையில் விளையாடிய போட்டிகளில் சோபிக்க தவறியுள்ளது. அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்துள்ள 4 போட்டிகளில் 3ல் சென்னை களத்தில் மட்டும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிராக சென்னை களத்தில் நடந்த ஒரு போட்டி மட்டும் சமனில் முடிந்தது.
சொந்த களத்தில் நடந்த போட்டியினால் புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸிற்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததைக் கண்டு சென்னை ரசிகர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். தற்போது புள்ளிபட்டியலில் 25 புள்ளிகளுடன் 8வது இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது. தமிழ் தலைவாஸின் சொதப்பலிற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மன்ஜீத் ஜீல்லர் கடந்த 3 போட்டிகளில் களம் காணதது என ரசிகர்கள் நினைக்கின்றனர்.
நாம் இங்கு சொந்த களத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் ரேட்டிங் புள்ளிகளைப் பற்றி காண்போம்.
#1 அஜய் தாகூர் - 4/10
ஆட்டம் - 4, ரெய்ட் புள்ளிகள் - 14, சராசரி ரெய்ட் புள்ளிகள் - 3.5
தமிழ் தலைவாஸ் அணிக்காக எப்பொழுதும் சூப்பர் 10 புள்ளிகளை வெல்பவர் அஜய் தாகூர். ஆனால் ராகுல் சௌத்ரி தமிழ் தலைவாஸ் அணியில் இணைந்தபின்னர் அந்த வழக்கம் முற்றிலும் மாறியது. இவர் இந்த சீசனில் அதிகப்படியான ரெய்டில் பிடிபடுகிறார். இதனால் இவரது ரெய்ட் புள்ளிகள் குறைந்த வண்ணம் உள்ளது.
சென்னை களத்தில் அஜய் தாகூர் மொத்தமாக 14 ரெய்ட் புள்ளிகளை மட்டுமே பெற்றார். ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. மேலும் இவருக்கு சரியாக அமையாத 14 ரெய்ட்கள் தமிழ் தலைவாஸ் அணிக்கு தோல்வியை அடித்தளமிட்டது.
#2 சபீர் பாபு - 3/10
ஆட்டம் -3, ரெய்ட் புள்ளிகள் - 3, சராசரி ரெய்ட் புள்ளிகள்- 1
சபீர் பாபு சென்னை களத்தில் ஒரு போட்டியில் மட்டுமே ஆரம்ப 7ல் இடம்பெற்றிருந்தார். அதன்பின் உள்ளூர் வீரர் வி.அஜீத் குமார் இவரது இடத்தை ஆக்கிரமித்தார். இந்த ஒரு போட்டியில் 9 ரெய்ட் சென்று 3 புள்ளிகள் மட்டுமே எடுத்தார்.
இவர் புனேரி பல்தான்ஸ், யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக களம் கண்டார். ஆனால் சிறப்பான பங்களிப்பை அளிக்கத் தவறினார்.
#3 வி. அஜீத்குமார் - 8/10
ஆட்டம் - 4, ரெய்ட் புள்ளிகள் - 19, சராசரி ரெய்ட் புள்ளிகள் - 4.75
வி.அஜீத் குமார் தனது முதல் சீசனில் களம் கண்டுள்ளார். இவர் சமீபத்தில் தமிழ் தலைவாஸ் அணியால் அடையாளம் காணப்பட்ட வீரர் ஆவார். இவரது 19 புள்ளிகள் மூலம் தமிழ் தலைவாஸின் இரண்டாவது சிறந்த ரெய்டராக வலம் வருகிறார். மேலும் புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணியை ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டவர் அஜீத் குமார்.
மேலும் பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 4 ரெய்ட் புள்ளிகளையும், யு மும்பா அணிக்கு எதிராக 5 புள்ளிகளும் எடுத்து அசத்தினார் அஜீத் குமார்.
#4 மோஹீத் சில்லர் - 6/10
ஆட்டம் - 4, டேக்கல் புள்ளிகள் - 10, சராசரி டேக்கல் புள்ளிகள் - 2.5
வலது மூலையில் டிபென்டராக வலம் வந்த மோஹீத் சில்லர் புனேரி பல்தான்ஸ், ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ், யு மும்பா அணிக்கு எதிரான போட்டிகளில் தலா 3 டேக்கல் புள்ளிகளை எடுத்தார். சொந்த களத்தில் முன்னாள் சேம்பியன் பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 டேக்கல் புள்ளியுடன் தொடங்கிய இவர், அடுத்த 3 போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து 9 புள்ளிகளை வென்றார்.
இவரிடமிருந்து அதிக டேக்கல் புள்ளிகளை ரசிகர்கள் சொந்த களத்தில் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு இவர் சிறிது ஏமாற்றம் அளித்துள்ளார்.
#5 ரன் சிங் - 5/10
ஆட்டம் - 4, டேக்கல் புள்ளிகள் - 9, சராசரி டேக்கல் புள்ளிகள் - 2.25.
ரன் சிங் சென்னை களத்தில் பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் தலா 4 புள்ளிகளை பெற்று அதிரடி தொடக்கத்தை அளித்தார். பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வந்த 4 புள்ளிகள் இவரது ரெய்டிலும், புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிராக வந்த 4 புள்ளிகள் டேக்கல் செய்யப்பட்டும் வந்தது.
பஞ்சாப் ஆல்-ரவுண்டரான இவர் எதிர்பாராத விதமாக பின்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளி கூட எடுக்காமலும், யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் 2 புள்ளிகள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை அளித்தார்.
#6 மன்ஜீத் சில்லர் - 3/10
ஆட்டம் - 1, டேக்கல் புள்ளிகள் - 0, சராசரி டேக்கல் புள்ளிகள் - 0.
தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி டிபென்டர் மன்ஜீத் சில்லர் சென்னை களத்தில் இந்த அணி விளையாடிய 4 போட்டிகளில் 1ல் மட்டுமே களம் கண்டார். இந்த போட்டியிலும் 1 போனஸ் புள்ளிகள் மட்டுமே பெற்றார். டேக்கல் புள்ளிகள் மற்றும் ரெய்ட் புள்ளிகள் என ஏதுவும் இவர் எடுக்கவில்லை.
#7 அஜீட் - 2/10
ஆட்டம் - 3, டேக்கல் புள்ளிகள் - 2, சராசரி டேக்கல் புள்ளிகள் - 0.67
தமிழ் தலைவாஸ் அணிக்கு வலது கவர் திசை தொடர்ந்து பலவீனமாக உள்ளது. இத்திசையில் களம் கண்ட அஜீட் சொந்த களத்தில் 3 போட்டிகளில் களமிறங்கி 2 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். இதைத்தவிர இவர் செய்த 6 தவறான டேக்கலால் தமிழ் தலைவாஸ் மேன்மேலும் கடும் நெருக்கடியை சந்தித்தது.
மோசமான ஆட்டத்தால் அஜீட் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
#8 வினித் சர்மா - 6/10
ஆட்டம் - 3, டேக்கல் புள்ளிகள் - 5, ரெய்ட் புள்ளிகள் - 3
ஆல்-ரவுண்டர் வினித் சர்மா, மன்ஜீத் சில்லருக்கு மாற்று வீரராக கடைசி 3 போட்டிகளில் களமிறக்கப்பட்டார். இவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஓரளவிற்கு சிறந்த ஆட்டத்தையே வெளிபடுத்தினார். இவர் சொந்த களத்தில் களமிறங்கிய முதல் போட்டியில் 100 சதவீத டேக்கல் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார். பின்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிராக 5 புள்ளிகளை வென்றார். ஆனால் யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளிகள் கூட எடுக்காமல் ஏமாற்றமளித்தார்.
#9 ராகுல் சௌத்ரி - 7/10
ஆட்டம் - 4, ரெய்ட் புள்ளிகள் - 22, சராசரி ரெய்ட் புள்ளிகள் - 5.5
தமிழ் தலைவாஸின் "ஷோ மேன்" என்றழைக்கப்படும் ராகுல் சௌத்ரி சொந்த களத்தில் நடந்த முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் வெளியே அமர்த்தப்பட்டார். ஆனால் புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 8 புள்ளிகளை வென்று ஆட்டத்தை சமநிலையடையச் செய்தார்.
3வது போட்டியில் சிறப்பாக ரெய்ட் செய்து 6 புள்ளிகள் பெற்றார். ஆனால் இவரது சிறப்பான ஆட்டம் அந்த போட்டியில் அணிக்கு பயனளிக்காமல் போனது. அதன்பின் யு மும்பா அணிக்கு எதிராகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ் தலைவாஸின் சிறந்த ரெய்டர் தான் என்பதை நிருபித்தார். ஆனால் அப்போட்டியிலும் தமிழ் தலைவாஸ் வெற்றி பெறவில்லை.
ராகுல் சௌத்ரி சென்னை களத்தில் சூப்பர் 10 குவிக்க தவறியதிற்கு முன்னணி காரணம், கடைசி 5 நிமிடங்களில் சிறந்த ரெய்ட்-ஐ அணிக்கு அளிக்க தவறியதே ஆகும். கேப்டன் அஜய் தாகூர் முழு நம்பிக்கையையும் ராகுல் சௌத்ரி மீது வைத்துள்ளார். ஆனால் ராகுல் சௌத்ரி தனது பொறுப்பை மறந்து விடுகிறார்.