இந்த வருடம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்தில் நடைபெறப்போகும் உலக கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். என்னதான் உலக கோப்பை தொடரே நடைபெற இருந்தாலும், அவர்களது ஆழ்மனதில் ஓடி கொண்டிருப்பது என்னவோ இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற ஐபிஎல் தொடரை பற்றித்தான். ஐபிஎல் தொடரின் பன்னிரண்டாவது சீசன் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதை போல ஒவ்வோர் ஆண்டும் அதிக ரன்களை குவிக்கும் பேட்ஸ்மேனை பெருமைப்படுத்தும் விதமாக ஆரஞ்சு நிற தொப்பியும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும்.
அதேபோல அதிக விக்கெட்களை கைப்பற்றும் பந்துவீச்சாளருக்கு ஊதா நிற தொப்பியும் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும், கடந்தாண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் ஆன்டிருவ் டை அதிக விக்கெட்களை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை வென்றார். அவ்வாறு, இந்த ஆண்டும் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை வெல்லப் போகும் மூன்று சிறந்த பந்து வீச்சாளர்களை வீச்சாளர்களை பற்றி இங்கு காண்போம்.
#3.டிரென்ட் போல்ட்:
நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர்களில் சிலர் உலக தரம் வாய்ந்த வீரர்கள் ஆவர். அதுவும், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை குறிப்பிடவே தேவையில்லை. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் வேகப்பந்து வீச்சால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்கள் கூட திணறி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர், டிரென்ட் போல்ட். இவரது அசுரத்தனமான பந்து வீச்சால் கிரிக்கெட் உலகமே அதிர்ந்து உள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக களம் இறங்கி சோபிக்க தவறவில்லை. கடந்த சீசனில் 18 விக்கெட்களைச் சாய்த்து டெல்லி அணியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்ந்தார். மேலும், இந்த ஆண்டும் அதே வேகத்துடனும் உற்சாகத்துடனும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கலாம்.
#2.ரஷித் கான்:
கடந்த 2017 ஆம் ஆண்டு தனது முதலாவது ஐபிஎல் சீசனில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கி 18 விக்கெட்களை கைப்பற்றி அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார், பதினெட்டே வயதான ரஷித் கான். கடந்த ஆண்டு இவரது அளப்பரிய பங்களிப்பால் சன்ரைசர்ஸ் அணி தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. கடந்த சீசனிலும் ஆன்டிருவ் டை-க்கு அடுத்தபடியாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெற்றார். இவரது அசாத்தியமான பந்துவீச்சு இம்முறையும் கை கொடுத்தால் தொடரின் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் ஆவார்.
#1.புவனேஸ்வர் குமார்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பல போட்டிகளில் இடம் பெறாத வீரர்களில் ஒருவர், புவனேஸ்வர் குமார். 2016 மற்றும் 17-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து இருமுறை அதிக விக்கெட்களை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார். யார்க்கர் மற்றும் நக்குல் பந்துகளை இயல்பாகவே வீசும் திறன் பெற்றமையால், இவரது பந்துவீச்சில் பல பேட்ஸ்மேன்கள் திணறுவர். மேலும், சமீப காலங்களில் சர்வதேச குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் தனது திறனை அவ்வப்போது நிரூபித்தும் வருகிறார். நிச்சயம் கடந்த ஆண்டு தவறவிட்ட ஊதா நிற தொப்பியை இம்முறை கைப்பற்றி ரசிகர்களின் தாகத்தை தீர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.