கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்து விளங்கும் சூப்பர்ஸ்டார்கள் மிகப்பெரிய தொகையை ஐபிஎல் இடங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கூட இதுவரை பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகி கிரிக்கெட் உலகிற்கு முத்திரை பதித்துள்ளனர். சமீபத்திய போட்டிகளில் வீரர்களின் செயல்பாடுகளை பொறுத்து ஏலத்தில் குறிப்பிட்ட வீரருக்கான போட்டி ஏற்படும். ஆனால், ஃபார்ம் இன்றி தவிக்கும் வீரர்கள் இப்படிப்பட்ட ஏலங்களில் ஒப்பந்தமாக மிக சிரமமானதாகும். எனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது போதிய ஆட்டத்திறனை வெளிப்படுத்தாத காரணத்தால் அடுத்த ஐபிஎல் சீசன் காலத்தில் ஒப்பந்தமாக மிகக்குறைந்த வாய்ப்பே உள்ள மூன்று இந்திய வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.யூசுஃப் பதான்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டு தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார், இந்த ஆல்ரவுண்டர். பரோடா அணியை சேர்ந்த இவர் ஐபிஎல் போட்டிகளில் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இவருக்கு அளிக்கப்பட்ட போதிலும் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தாமலே இதுவரை உள்ளார். இதுவரை 10 போட்டிகளில் 40 ரன்களை மட்டுமே இவர் குவித்து ஏமாற்றம் அளித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 88.88 என்ற வகையில் உள்ளதே இவரது மோசமான ஃபார்மை எடுத்துரைக்கின்றது. 36 வயதான இவர் அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் நிச்சயம் தக்க வைக்கப் போவதில்லை. அதேபோல மற்ற அணிகளிலும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வர போவதில்லை.
#2.யுவராஜ் சிங்:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இறுதிவரை ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கை எடுக்க முன்வரவில்லை. இறுதியாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடப்பு தொடரின் முதலாவது போட்டியில் அபாரமாக அரை சதம் அடித்து தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ச்சியாக 4 போட்டிகளில் அணியில் இடம் பெற்று 98 ரன்களைக் குவித்திருந்தார். அடுத்து வந்த லீக் ஆட்டங்களில் இவர் ஆடும் லெவனில் இருந்து கழற்றி விடப்பட்டார். இவரின் இடத்தை அணியில் உள்ள மற்ற இளம் வீரர்கள் பிடித்தமையால், வேறு எந்த போட்டியிலும் இவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கவில்லை. எனவே, இந்த ஆண்டே இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், அடுத்த ஆண்டு இதே நிலைதான் தொடரும் என கணிக்கபடுகிறது.
#1.முரளி விஜய்:
கடினமான கவர் டிரைவ், அற்புதமான ஃப்ளிக் ஷாட்கள், நொறுக்கும் ஸ்கூப் சாட்டுகள் என பலவிதமான ஷாட்களை கற்று கைதேர்ந்தவரான முரளி விஜய், ஐபிஎல் போட்டிகளில் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரராக விளங்கினார். ஆனால், கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இவரை 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தொடர்ந்து அணியில் இடம்பெற்று வரும் இவர் ஆடும் லெவனில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் கூட இரு போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய இவருக்கு 35 வயது ஆகிவிட்டதால், அடுத்து வர உள்ள ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இவர் விலை போகுவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளது.