அதிரடிக்கும், விறுவிறுப்புக்கும், பஞ்சமில்லாத ஐபிஎல் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நமது இந்தியாவில் தொடர்ந்து 11 வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் ஒரு சில அணிகள், சில போட்டிகளில் சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) குஜராத் லயன்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் ( 2017 ஆம் ஆண்டு )
குஜராத் லயன்ஸ் – 153/9 ( 20 ஓவர்கள் )
மும்பை இந்தியன்ஸ் – 153/10 ( 20 ஓவர்கள் )
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இஷான் கிசான் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே பிரண்டன் மெக்கலம், மலிங்கா ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிசான், 35 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். ஆரோன் பின்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு வந்த ரவீந்திர ஜடேஜா மட்டும், சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 28 ரன்கள் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஜாஸ் பட்லர் மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய பார்த்திவ் படேல், 44 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். அதன் பின்பு வந்த ரோகித் சர்மா மற்றும் பொல்லார்ட், ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 153 ரன்கள் அடித்தது. போட்டி டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த சூப்பர் ஓவரில் பொல்லார்ட், 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியை விளாசியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 11 ரன்கள் அடித்தது. ஆனால் பும்ராவின் அற்புதமான பந்துவீச்சால் குஜராத் அணி, சூப்பர் ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
#2) டெல்லி கேபிடல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 2019 ஆம் ஆண்டு )
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 185/8 ( 20 ஓவர்கள் )
டெல்லி கேபிடல்ஸ் - 185/10 ( 20 ஓவர்கள் )
இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், 10 ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. கிறிஸ் லின் மற்றும் ராபின் உத்தப்பா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள், சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். இறுதியில் வந்து வெளுத்து வாங்கிய ரஸல், 28 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவ் மற்றும் தவான் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷாவ், 55 பந்துகளில் 99 ரன்கள் விளாசினார். அதன் பின்பு வந்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் விரைவிலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் டெல்லி அணியும் 20 ஓவர்களின் முடிவில் 185 ரன்கள் அடித்தது. எனவே சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவர்:
சூப்பர் ஓவரில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து, 11 ரன்கள் அடித்தது. ஆனால் ரபாடாவின், சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி, சூப்பர் ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.