நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் இரு லீக் ஆட்டங்களில் மதியம் 4 மணிக்கு டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும் மோதவிருக்கின்றன. டெல்லி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கூடுதல் நிகர ரன் ரேட் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களுக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்க உள்ளது, டெல்லி அணி. "முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சற்று அவதிப்படுவதாக ரபாடா கூறினார். இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட டிரெண்ட் போல்ட், மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக எங்களது அணிக்கு செயல்படுவார். இதுநாள் வரை, ரபாடா எங்களுக்கு ஒரு சிறந்த இறுதிகட்ட ஓவரை வீசும் வீரராகத் திகழ்ந்தார். தற்போது அவருக்கு பதிலாக டிரென்ட் போல்ட் இந்த பணியை செய்வார் என நம்புகிறோம்", என கூறியுள்ளார் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதை தொடர்ந்து டெல்லி அணி நிகர ரன் ரேட்டை சற்று இழந்தது. எனவே, இழந்த ரன் ரேட்டை ஈடுகட்டும் வகையில் இன்றைய போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளதால் டெல்லி அணிக்கு சற்று ரன்களை குவிக்க சாதகமாக அமையும். ஏற்கனவே, டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்த அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கின்றனர்.
மறுமுனையில் ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 11 வெற்றி புள்ளிகளை கொண்டு புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தில் வகிக்கிறது. இந்த அணிக்கும் ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது. அதுவும் குறைந்த அளவில் உள்ளது. உலகக் கோப்பை முன்னேற்பாடுகளால் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் திரும்பியுள்ளதால், ராஜஸ்தான் அணிக்கு சற்று பின்னடைவாகும். அணியை மீண்டும் அஜிங்கிய ரஹானே வழி நடத்த உள்ளார். ஸ்டீவன் ஸ்மித்திற்கு பதிலாக ஆஷ்டன் டர்னர் ஆடும் லெவனில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உலகக்கோப்பை முன்னேற்பாடுகளால் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆச்சர் போன்ற முன்னணி வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங்கில் ரஹானே, சஞ்சு சாம்சன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சற்று நம்பிக்கை அளிக்கின்றனர். பவுலிங்கில் சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். ஏற்கனவே, நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் ஜெய்ப்பூரில் சந்தித்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் ரஹானே சதம் அடித்த போதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.
அணியின் முக்கிய வீரர்கள்:
டெல்லி கேப்பிடல்ஸ் - ரிஷப் பண்ட்:
நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இரண்டு அரைசதங்கள் உட்பட 348 ரன்களை குவித்துள்ளார். மேலும், அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் பதினைந்தாம் இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். மேலும், அதுவே நடப்பு தொடரில் இவர் குவித்த அதிகபட்ச ரன்களாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஸ்ரேயாஸ் கோபால்:
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார், ஸ்ரேயாஸ் கோபால். இவர் விளையாடியுள்ள 13 போட்டிகளில் 18 விக்கெட்களைச் சாய்த்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும், நடப்பு தொடரில் விராத் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரை இருமுறை தமது பவுலிங்கில் வீழ்த்தியுள்ளார். ரகானேவின் முக்கிய துருப்புச்சீட்டாக விளங்கும் இவர், டெல்லி அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய வீரராக திகழ்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
அஜிங்கிய ரஹானே, லியாம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன், ஆஸ்டன் டர்னர், ரியான் பாரக், ஸ்டூவர்ட் பின்னி, மஹிப்பால் லோம்ரர், ஸ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனத்கட் மற்றும் தாமஸ்.
டெல்லி கேப்பிடல்ஸ்:
பிருத்திவி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், காலின் இன்கிராம், சந்திப் லேமிச்சானே, அக்ஷர் பட்டேல், கிறிஸ் மோரிஸ், சுஜித், அமித் மிஸ்ரா மற்றும் டிரெண்ட் போல்ட்.