2019 ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றுக்கு இன்னும் இரு அணிகள் தகுதி பெற இருக்கின்றன. ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகள் பிளே ஆப் சுற்றில் தங்களது வாய்ப்பினை உறுதி செய்துவிட்ட நிலையில், இன்னும் மீதி உள்ள இரு இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகின்றது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதிய லீக் ஆட்டம் கடும் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது.
எனவே, மீதமுள்ள ஐந்து அணிகளான மும்பை, ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் இடையே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதில் கடும் போட்டி நிலவுகின்றன. இந்த ஐந்து அணிகளில் மும்பை அணி மிகச்சிறந்த வெற்றி புள்ளிகளோடு முன்னிலை வகிக்கின்றது. இந்த அணிக்கு மீதமுள்ள இரு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே இந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். அதேபோல, மும்பை அணிக்கு அடுத்தபடியாக பலமான அணியாக கருதப்படும் ஹைதராபாத் அணி, புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. இன்னும், எஞ்சியுள்ள இரு போட்டிகளை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு ஹைதராபாத் அணி முன்னேற முடியும். ஒருவேளை, இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியுற்றால் அடுத்த சுற்றில் நீடிப்பதில் சற்று சிக்கல் ஏற்படும். இதே நிலைதான் மற்ற அனைத்து அணைகளுக்கும் தொடர்கிறது.
இந்த மாதம் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலக கோப்பை தொடரால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளைச் சேர்ந்த வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியும் வெளியேறவும் உள்ளனர். ஏற்கனவே, தங்களது சொந்த நாட்டு அணிக்கு திரும்பியுள்ள ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆச்சர் போன்ற வீரர்கள் தங்களது ஐபிஎல் அணிகளை விட்டு வெளியேறியதால் அந்தந்த அணிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடர் முடியும் வரை விளையாடிக் கொள்ளலாம் என அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தெரிவித்துள்ளன. எனவே, இவ்வாறு தங்களது அணியை விட்டு வெளியேறிய முக்கியமான இரு வீரர்களை இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#2.ஸ்டீவன் ஸ்மித் - ராஜஸ்தான் ராயல்ஸ்:
நடப்பு ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஸ்டீவன் ஸ்மித். இதன் பின்னர், தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ் சில வெற்றிகளை கண்டது. இதனால், தன்னிடம் இருந்த கேப்டன் பொறுப்பை திரும்ப அளித்த ரகானேவின் பேட்டிங்கில் சில அற்புதங்கள் வெளிவர தொடங்கின. அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய போட்டிதான் நடப்பு தொடரில் இவருக்கு கடைசி போட்டியாக அமைந்தது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 319 ரன்களை 39.88 என்ற சராசரியுடன் குவித்துள்ளார்.
#1.டேவிட் வார்னர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர், டேவிட் வார்னர். 2014ம் ஆண்டு முதல் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றி வருகிறார். கடந்த நான்கு ஐபிஎல் சீசன்களில் ஒவ்வொன்றிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் வீரர்களில் முதலிடம் வகிப்பவர், டேவிட் வார்னர். இவர் 2019 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 8 அரை சதங்கள் உட்பட மொத்தம் 692 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 69.28 வகையில் சிறப்பாக உள்ளது. இவருக்கு அடுத்தபடியாக தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் கே.எல்.ராகுல் 172 ரன்கள் பின்தங்கி உள்ளார்.