2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமான இரு அணிகள் மோதிய இறுதிப்போட்டியோடு முடிவுற்றது. நடந்து முடிந்த தொடரில் 32 போட்டிகள் ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை சென்றது. பெரும்பாலான போட்டிகளில், தனிநபரின் ஆட்டங்கள் எடுபட்டு அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளன. எனவே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ஹர்திக் பாண்டியா:
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் மிகச்சிறந்த பங்களிப்பினை அளித்தார். இவர் விளையாடி 15 போட்டிகளில் 402 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், பல ஆட்டங்களில் ஆட்டத்தின் இறுதி இறுதிக்கட்ட நேரங்களில் தமது பேட்டிங்கால் வெளுத்து வாங்கியுள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 191.42 என்ற வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவிய போதிலும் இவர் 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து அனைவரது பார்வையும் இழுத்தார்.
#2.டேவிட் வார்னர்:
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைக்கு பின்னர், மீண்டும் விளையாட வந்தார் டேவிட் வார்னர். இவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த வண்ணம் உள்ளார். மேலும், நடப்பு தொடரில் 692 ரன்களை குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். வெறும் 12 போட்டிகளில் இவர் விளையாடி இருந்தாலும் இவரின் பங்களிப்பு ஐதராபாத் அணியை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்தது. இவரது ஆட்டங்களில் ஒரு சதம், 9 அரைசதங்கள் அடக்கமாகும்.
#1.ஆந்திரே ரசல்:
இந்தத் தொடரின் முதற் பாதியில் தமது பேட்டிங்கால் அட்டகாசப்படுத்தினார், ஆந்திரே ரசல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறப்பான பங்கை இவர் அளித்திருந்தாலும் பெரும்பாலான போட்டிகளில் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை உண்மையில், இவர் டாப் ஆர்டர் பேட்டிங்கில் களமிறக்கப்பட்டால், அதிக ரன்களைக் குவிக்க போதிய பந்துகள் கிடைக்கும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். கொல்கத்தா அணி நிர்வாகம் இவரைப் பெரிதும் பயன் படுத்தாமல் இருந்தது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தமைக்கு முக்கிய காரணமாக வழிவகுத்தது. தொடரின் மிக மதிப்பு மிக்க வீரராக இவர் விளங்கினார். மேலும், 13 இன்னிங்ஸில் விளையாடி 510 ரன்களை குவித்து உள்ளார். தொடரின் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டான 204.81 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்து சாதனை புரிந்தார். இது மட்டுமல்லாது, தொடரின் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மூன்றாம் பேட்ஸ்மேனாக களமிறங்கி, 80 ரன்கள் ஆட்டமிழக்காமல் குவித்தது இந்த தொடரின் மிகச்சிறந்த ஆட்டமாக அமைந்தது.