2019 ஐபிஎல் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒன்பது லீக் ஆட்டங்களில் உள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கான நான்காவது அணியாக எந்த அணி தகுதி பெற போகின்றது பற்றிய ஆர்வம் இன்னும் நீடித்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா, தோனி, ரபாடா, ரஸ்ஸல் போன்றோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது, இளம் வீரர்களான ஷ்ரேயாஸ் போபால், ரியான் பாரக், ஜோப்ரா ஆர்ச்சர், ராகுல் சாகர் போன்ற வீரர்களும் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆகி ஏமாற்றமளித்த வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.ஜெய்தேவ் உனத்கட் - ராஜஸ்தான் ராயல்ஸ்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆன வீரர்களில் ஒருவர் ஜெய்தேவ் உனத்கட். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 8.4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார். மேலும், இவரது பௌலிங் எக்கனாமி 10-ஐ தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு இதே அணிக்காக 11.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆகினார். கடந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை எடுத்து ஏமாற்றம் அளித்த போதிலும் ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த ஆண்டும் ராஜஸ்தான் அணியில் தொடர்கிறார்.
ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்காக களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டதன் பேரில் நடப்பு ஆண்டில் இவரை தக்கவைத்தது, ராஜஸ்தான் அணி நிர்வாகம். 2017 ஆம் ஆண்டு புனே அணிக்காக இடம்பெற்று 12 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், இவரது பௌலிங் எகனாமி ஏழு என்ற அளவில் சிறப்பாக அமைந்தது.
#2.காலின் இன்கிராம் - டெல்லி கேப்பிடல்ஸ்:
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான காலின் இன்கிராம், டி20 போட்டிகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர். இதுவரை இவர் 250க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடி 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது சராசரி 31 என்ற வகையில் சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்குபெற்று 11 போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் குவித்தார். இதனால், டெல்லி கேப்பிடல் நிர்வாகம் இவரை 6.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
நடப்பு தொடரில் முதலாவது ஆட்டத்தில் 32 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதன் பின்பு, எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. இதுவரை நடைபெற்ற 11 போட்டியில் களமிறங்கிய 172 ரன்கள் குவித்து ஏமாற்றம் அளித்து வருகிறார்.
#1.சிம்ரன் ஹெட்மயர் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான ஹெட்மயர், 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று சிறப்பாக விளையாடியதன் பெயரில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஹெட்மயர். 78 பந்துகளில் அதிரடியாக சதத்தை கண்ட இவர், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 259 ரன்கள் குவித்தார். இதனால், பெங்களூரு நிர்வாகம் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும் வகையில் இவரை 4.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், இவர் களமிறங்கிய நான்கு போட்டிகளில் வெறும் 15 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார்.