டி20 போட்டிகளானது நிச்சயம் பேட்ஸ்மேன்களின் போட்டியே. டி20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவிக்கும் போட்டியே சிறந்த பொழுதுபோக்காகவும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க கூடியதாகவும் அமைகின்றன. அதுபோல, இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் பேட்டிங் திறமைகள் நிருபனம் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த ஐபிஎல் தொடரில் தொடுக்கப்பட்ட மூன்று சிறந்த சரவெடி தாக்குதல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
#1. ஜானி பேர்ஸ்டோ-114:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிகரமான தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் தனது முதலாவது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார். இவர் டேவிட் வார்னர் உடன் இணைந்து பெங்களூர் அணியின் பவுலிங்கை சீர்குலைத்தார். இதனால், 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை ஹைதராபாத் அணி குவித்தது. இதில் குறிப்பிடும் வகையில், ஜானி பேர்ஸ்டோ 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் உட்பட 114 ரன்கள் குவித்தார். மேலும் தமது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரையும் பதிவு செய்தார். இதன் மூலம், ஹைதராபாத் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனின் அற்புதமான ஆட்டங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.
#2. ஆந்திரே ரசல்-48*:

பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற 24 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நேரத்தில் அதிரடி வீரர் ரசல் களம் புகுந்து, பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்கினார். இறுதியில் 13 பந்துகளில் ஒரு பவுண்டரியும் ஏழு சிக்சர்களையும் உட்பட 46 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்து கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்தது.
#3. ஹர்திக் பாண்டியா-91:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 233 ரன்களை மும்பை அணி சேஸ் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கி மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களை குவித்து தடுமாறிக்கொண்டிருந்தது. இதன்பின்னர், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களம்புகுந்தார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு தாக்குதல்களை அபாரமாக சமாளித்து 34 பந்துகளில் 91 ரன்களை குவித்துள்ளார். மேலும், இந்த போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதம் ஆக பதிவானது. இவரின் இன்னிங்சில் ஒன்பது பவுண்டரிகளும் ஆறு சிக்சர்களும் விளாசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.