பன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து நான்காவது முறையாக பட்டம் வென்றது, மும்பை. கடந்த சீசனகளை போல இந்த சீசனிலும் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது. பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிலும் சரி இரண்டிலுமே தங்களது ஆதிக்கத்தை செலுத்த தவறவில்லை. தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். மேலும், ஊதா நிற கோப்பையை கைப்பற்றினார், இம்ரான் தாகிர். இதுபோல தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்கள் அடுத்த சீசனிலும் தங்களது அணிக்காக தக்க வைக்கப்பட உள்ளனர். அவ்வாறு, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்டு போற்றப்படாத மூன்று வெளிநாட்டினர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.சோப்ரா ஆச்சர்:
ராஜஸ்தான் அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டர் சோப்ரா ஆச்சர், 11 போட்டியில் விளையாடி பதினொரு விக்கெட்களை 6.76 என்ற எக்கனாமிக்குடன் கைப்பற்றினார். குறிப்பாக, ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை வீசும் இவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை அள்ளியது இவரது இந்த தொடரின் சிறந்த பந்துவீச்சு சாதனையாகும். உலககோப்பை முன்னேற்பாடுகளால், ஐபிஎல் தொடர் முடியுமுன்னே இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார். தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் விளையாடி வருகிறார்.
#2.முகமது நபி:
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்களில் ஒருவர், முகமது நபி. இவர் முதலாவது லீக் போட்டியில் கனே வில்லியம்சன் காயமடைந்ததால் களமிறக்கப்பட்டார். அந்த போட்டியிலேயே 11 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதன்பேரில், ஐதராபாத் அணியின் ஆடும் லெவனில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். பேட்டிங்கிலும் தன் பங்குக்கு லோவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி விரைவிலேயே ரன்களை குவித்து வந்தார். மேலும் 8 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களை 6.65 என்ற பவுலிங் எக்கனாமிக் உடன் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் 115 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
#3.மொயின் அலி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி இந்த சீசனில் தமது திறமையை சிறப்பாக நிரூபித்துள்ளார். இவர் தொடரை சிறப்பாக தொடங்க விட்டாலும் முடியும் முன்பு வெற்றிகரமாக முடித்தார். 11 போட்டிகளில் விளையாடி 220 ரன்களை 165.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். பந்துவீச்சிலும் 6 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 66 ரன்கள் ஆட்டமிழக்காமல் குவித்தது இவரது சிறந்த ஆட்டமாக இந்த தொடரில் அமைந்துள்ளது.