2019 ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்று நேற்று நடந்தது. இந்த போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இரண்டாவது தகுதி சுற்றில் நாளை விளையாட வேண்டும். தோற்ற அணி தொடரில் இருந்து வெளியேற நேரிடும். ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைவதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஏனெனில், 12 புள்ளிகளைக் கொண்ட ஒரு அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். எனவே, நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் சிறப்பாக விளையாடி நல்லதொரு தொடக்கம் அமைத்தார். இவர் விளையாடிய 19 பந்துகளில் பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். பவர் பிளே ஓவர்கள் முடிந்த பிறகு இவர் ஆட்டமிழந்தார். டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீச வந்த பிறகு சன்ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க தடுமாறினர். மணிஷ் பாண்டே மற்றும் கனே வில்லியம்சன் ஆகியோர் மட்டுமே தங்களது பங்குக்கு பொறுப்பான ஆட்டத்தை அளித்தனர். இறுதிக்கட்ட நேரத்தில் விஜய் சங்கர் மற்றும் முகமது நபி ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 160 ரன்களை கடந்தது. 20 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் குவித்தது, ஹைதராபாத் அணி.
இதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய டெல்லி அணி, சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. இளம் வீரர் வீரர் பிரித்வி ஷா அற்புதமாக விளையாடி அரைசதம் கண்டார். ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் கலீல் அகமது வீசிய பந்து வீச்சில் பிருத்திவி ஷா உட்பட இரு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கபளீகரம் செய்தார். கூடுதல் அதிர்ச்சியாக ரஷீத் கான் தனது ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை அள்ளினார். ஆட்டத்தின் திருப்புமுனையாக இது இருந்த போதிலும் கேப்டன் வில்லியம்சன் தனக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தத் தவறினார். டெல்லி அணி வெற்றி பெற ஆட்டத்தில் இறுதி 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வில்லியம்சன் 18-வது ஓவரை கலில் அகமதுவிடம் கொடுப்பதற்கு பதிலாக பாசில் தம்பியிடம் பந்து வீச அழைத்தார்.
இதன் மூலம், ஹைதராபாத் அணியின் அடுத்த சுற்று கனவு அடியோடு முடிந்தது. ஏனெனில், 18-வது ஓவரை வீசிய பாசில் தம்பி 22 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரின் ரிஷப் பண்ட் அற்புதமாக விளையாடினார். அவர் சந்தித்த 21 பந்துகளில் 49 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 19வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசி இரு விக்கெட்டுகளை அள்ளினார். இருப்பினும், ஆட்டத்தின் முடிவு டெல்லி அணிக்கு சாதகமாக முடிந்தது. இறுதியில் டெல்லி அணி ஒரு பந்து மீதமிருக்க 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடரில் இருந்து வெளியேறியது. டெல்லி அணி நாளை நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது சுற்றில் விளையாட இருக்கிறது.