இந்தியன் பிரீமியர் லீக் நடப்பு தொடரில் வெளியேற்றுதல் சுற்றுக்கான போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவேண்டும். புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளைப் பெற்று இருந்தாலும் நிகர ரன் ரேட் குறைந்து காணப்பட்டதால், டெல்லி அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது, டெல்லி கேப்பிட்டல்ஸ். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக கடந்த இரு லீக் ஆட்டங்களில் தோற்றுள்ளது. இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேற சரி சமமான பலமும் உள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியில் களம் காண இருக்கின்றன.
டெல்லி கேப்பிடல்ஸ்:
பேட்டிங்:
முக்கிய பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட்.
இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களான தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் தொடக்கத்திலும் ஆட்டத்தை முடித்து வைப்பதில் ரிஷப் பண்ட்டும் தங்களது பணியை அற்புதமாக செய்து கொண்டு வருகின்றனர். இதுவரை தாக்கத்தை ஏற்படாத காலின் இன்கிராம் இன்றைய போட்டியில் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்புவர் என நம்பப்படுகிறது.
பௌலிங்:
முக்கிய பந்துவீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட் ,அமித் மிஸ்ரா மற்றும் இசாந்த் சர்மா
டெல்லி அணியில் கலக்கி வந்த ரபாடா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும், அவரின் இடத்தை டிரென்ட் போல்ட் தற்போது நிரப்பி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். ஏற்கனவே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளதால், இன்றைய போட்டியில் டெல்லி அணியின் பந்துவீச்சு ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம்.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலிங் இன்கிராம், ரூதர்ஃபோர்டு, அக்ஷர் பட்டேல், கீமோ பால், டிரென்ட் போல்ட், அமித் மிஸ்ரா மற்றும் இசாந்த் சர்மா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
பேட்டிங்:
முக்கிய வீரர்கள் - ரித்திமான் சாஹா, மணிஷ் பாண்டே மற்றும் கனே வில்லியம்சன்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங் முதுகெலும்பாக விளங்கி வந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் இடத்தை தற்போது மணிஷ் பாண்டே சற்று நிரப்பி வருகிறார். தொடரின் பிற்பாதியில் ஃபார்முக்கு திரும்பிய மணிஷ் பாண்டே, அணியின் ஆறுதலளிக்கும் ஒரே பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கனே வில்லியம்சன் 70 ரன்கள் அடித்து சற்று நம்பிக்கை அளிக்கிறார். மேலும், அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களான மார்டின் கப்டில், விஜய் சங்கர் விருத்திமான் சஹா போன்றோரும் சீராக ரன்களைக் குவித்தால் மிகப் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.
பவுலிங்:
முக்கிய பந்துவீச்சாளர்கள் - முகமது நபி, கலில் அகமது மற்றும் ரஷீத் கான்
கடந்த சீசன்களை போல் நடப்பு சீசனில் இந்த அணிக்கு பவுலிங் சிறப்பாக அமையவில்லை. விசாகப்பட்டினத்தில் இன்றைய போட்டி நடைபெறுவதால் அணியின் முக்கிய துருப்பு சீட்டாக முஹம்மது நபி இருப்பார் என கணிக்கப்படுகிறது. டெல்லி அணியின் இளம் பேட்டிங் வரிசையை சீர் குலைக்கும் வகையில், ஆட்டத்தின் பவர் பிளே ஓவர்களிலேயே இவர் பவுலிங்கில் ஈடுபடலாம். இவர் மட்டுமல்லாது, தொடரின் பிற்பாதியில் ஆடும் லெவனில் இடம்பெற்று சிறப்பாக விக்கெட்களை கைப்பற்றி வரும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது இன்றைய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
மார்டின் கப்டில், விருத்திமான் சஹா, கனே வில்லியம்சன், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், யூசுப்பதான், முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது மற்றும் சந்தீப் சர்மா.